சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை புத்தக காட்சி இன்று(ஜன.08) நடைபெறாது என அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் சென்னை புத்தக காட்சி இன்று(ஜன.08) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் காட்சி வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் நாளை(ஜன.09) வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) உறுப்பினர்களை தவிர உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்த ஆண்டு 150க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தலா ஒரு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூ.10 பெறப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். குடிநீர் வசதி, உணவு கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆப் புத்தா, தடாகம், திருநங்கை பிரஸ் எல்எல்பி ஆகிய அமைப்புகளும் அரங்குகள் அமைத்துள்ளன.

மேலும் அனைத்து விதமான தலைப்புகளிலும் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள், கதை, சிறுகதை, கவிதை தொகுப்பு, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் ஆளுமைகள் எழுதிய நூல்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள், அறிவியல், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் என அனைத்து விதமாக புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் பதிப்பகமும், உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான பென்குயின் ரேண்டம் ஹவுஸ், பிரிட்டிஷ் கவுன்சில், ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ், நிறுவனங்களும் பங்கேற்றன. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் கருத்தரங்கங்கள் நடக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் சென்னை புத்தக காட்சி இன்று(ஜன.08) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை(ஜன.09) வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.