சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டு’ கொண்டாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை: இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள், 16 துணை கமிஷனர்கள் என 18 ஆயிரம் போலீசார் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பணியில் ஈடுபட்டனர். சென்னையில் 100க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் சிரமங்கள் இன்றி சிறப்பு வழிபாட்டிற்கு வந்து செல்லும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள், பைக் ரேசில் ஈடுபடும் நபர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநகரம் முழுவதும் 420 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டு பைக் ரேஸ் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுவதை கண்காணிக்க 25 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுக்கள் எடுத்த சிறப்பான நடவடிக்கையால் பைக் ரேஸ் முற்றிலும் தடுக்கப்பட்டது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல் மாநகரம் முழுவதும் 420 வாகன சோதனை இடங்களையும் கமிஷனர் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினார்.

இதனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்து ஆண்டு, ஒரு விபத்துக்களும் மற்றும் உயிரிழப்பு இல்லாத புத்தாண்டாக அமைந்துள்ளது.புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘டிரோன்’கேமரா மூலமும், துணை கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட பெண் காவலர்கள் கொண்ட குழுவினரும் சிறப்பாக செயல்பட்டதால், பெண்களுக்கு எந்த தொந்தரவுகளும் இன்றி இனிமையான புத்தாண்டாக இந்த 2024ம் ஆண்டு பிறந்துள்ளது. எனவே ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டு’ என்ற முழக்கத்தை சரியாக முறையில் திட்டமிட்டு நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என பாதுகாப்பு பணியில் இருந்து 18 ஆயிரம் போலீசார் 1500 ஊர்காவலர் படையினருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, இரவு நேரங்களில் தேவையில்லாத வகையில் வெளியே சுற்றுவது ஆகிய நிகழ்வுகளை பொதுமக்கள் பல குறைத்து கொண்டதற்கும், காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்கும் போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மாநகர காவல்துறை 252 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அதேபோல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆபத்தான முறையில் பைக் ரேசில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்து மொத்தம் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!