சென்னையின் குடிநீர் தேவை மற்றும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ரூ.22,000 கோடியில் புதிய திட்டம் உருவாகிறது: திட்ட அறிக்கை தயாரிப்பு பணி 70% நிறைவு; நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
சென்னையின் குடிநீர் தேவைகள் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் 70% முடிவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 20.50 டிஎம்சி அடி கூடுதல் சேமிப்புத் திறன் உருவாக்குவதற்கும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளுக்கு நிரந்தரத் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரூ.22,004 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 7ல் ஒரு பங்கு சென்னையில் உள்ளது. சமீபத்திய தரவுகள் படி, சென்னை சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்டது. மாநிலத்திலேயே அதிக மக்கள் அடத்தி கொண்டதும் சென்னை நகரமே. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,000 பேர் வரை வசிக்கின்றனர். இந்த நகரத்தின் ஒரு நாளுக்கான குடிநீர் தேவை சுமார் ஒரு டி.எம்.சி ஆகும். இதில் 850 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குகிறது. மீதமுள்ள தேவை நிலத்தடி நீர் உள்ளிட்ட பிற ஆதாரங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படும்.

செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் மற்றும் சமீபத்தில் கட்டப்பட்ட தேர்வாய் கண்டிகை என 5 ஏரிகள் சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. செம்பரம்பாக்கத்தின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி, பூண்டியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். புழல் 3,300 மில்லியன் கன அடி நீரையும், சோழவரம் 1,081 மில்லியன் கன அடி நீரையும், தேர்வாய் கண்டிகை 500 மில்லியன் கன அடி நீரையும் இருப்பு வைத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் சென்னையில் ஏற்படும் தொடர் வெள்ளம் மற்றும் குடிநீர் பிரச்னைகளிலிருந்து காப்பதற்காக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படுவதை தவிர்க்கவும், குறுகியகால மற்றும் நீண்டகால வெள்ளத் தணிப்பு பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டுள்ளது. அதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய்க்கண்டிகை, செங்குன்றம் மற்றும் வீராணம் ஏரிகள் மொத்த கொள்ளளவான 13.222 டிஎம்சி அடி நீர் சென்னைக்கு குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. தற்பொழுது, சென்னை குடிநீர் மற்றும் தொழில் துறைக்கான தேவை 22 டிஎம்சி அடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பெருகிவரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு 2035ம் ஆண்டுக்குள் நீர்த்தேவை சுமார் 32 டிஎம்சியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய காலநிலை பருவமாற்றம் வெப்பமண்டல பகுதிகளில் காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது ஏற்படும் வெள்ளத்தை தாங்கும் நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்கவும் சென்னை நீர் வழங்கல் அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வெள்ளத்தை தணிக்கும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தணித்தல், மழைநீரைச் சேமித்து நீர் பற்றாக்குறையுள்ள காலங்களில் பயன்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. புதிய சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல் தற்போதுள்ள நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவை அதிகரித்தல், நீர்கடத்தும் திறனை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான நீர்நிலைகளை இணைப்பதன் மூலம் மழைநீர் சேமிப்புத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. மேலும் சென்னையின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 20.50 டிஎம்சி அடி கூடுதல் சேமிப்புத் திறன் உருவாக்குவதற்கும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு நிரந்தரத் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரூ.22,004 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் வெள்ளத் தணிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளவும், சென்னை நகருக்கு கூடுதல் நீர் வழங்கவும் வகுக்கப்பட்டுள்ள திட்டம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 5.02 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிறுவனங்களுடன் ஒப்பந்தமாகியுள்ளது. அதன்படி தொடக்க அறிக்கை நீரியல், நீர் சமநிலை ஆய்வு அறிக்கை, வரைவு இறுதி விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை, இறுதி விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டு 70% பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தாண்டிற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு பணிகள் தொடங்குவதற்காக திட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ரயிலை மறித்து மக்கள் போராட்டம்: சிறப்பு விசாரணை குழு அமைத்து மகாராஷ்டிரா அரசு உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

அரசின் வசம் உள்ள ஹேமா கமிஷன் அறிக்கை பாகத்தில் நடிகைகளிடம் அத்துமீறிய முக்கிய நடிகர்கள் குறித்த விவரங்கள்: அதிர்ச்சி தகவல்கள்