சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்த பாஜ கவுன்சிலர்: சஸ்பெண்ட் செய்ய திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்த பாஜக கவுன்சிலரை ஒரு வருடம் அல்லது ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்ய திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூட்ட தொடக்க உரையில் சென்னையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்து குறித்து பேசினார். அப்போது திடீரென பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், பள்ளிகளில் சாதி பாகுபாடுகளை களைய வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்த முன்னாள் நீதியரசர் சந்துருவின் அறிக்கையை மாநகராட்சி மாமன்றத்தில் மேயர் முன்னிலையில் கிழித்து வீசி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பையடுத்து உமா ஆனந்த் வெளியேறினார். அவரை ஒரு வருடம் அல்லது ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ஆணையருடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மாமன்ற நடவடிக்கைக்கு தொடர்பில்லாமல் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசிய கருத்துகளை அவைகுறிப்பில் இருந்து நீக்க மேயர் பிரியா உத்தரவிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சியின் இன்றைய கூட்டதில் மொத்தம் 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்க பட்டு வரும் தினகூலியை ரூபாய் 300 இல் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 3.07 கோடி கூடுதல் செலவாகிறது. அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்கப்படுகிறது. சமீபத்தில், அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோலசென்னை மாநகரட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களை அவ்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டும் சம்பவம் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாட்டுத் தொழுவங்களில் அடைக்க மண்டலம் 5,6,8,9 மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூடுதலாக மண்டலம் 1,2,3,4,7,11,12,13,14 மற்றும் 15 ஆகிய 10 மண்டலங்களில் மாடுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்த தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்களை தற்காலிக தின கூலி பணியாளர்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியில் ஈடுபடுத்த சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் அரசாணை எண் 36 படி அட்டெண்டர் என்ற பணியில் நிர்ணயித்த குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியத்தை நபர் ஒருவருக்கு 687 ரூபாய் என நிர்ணயம் செய்யவும், இதன் மூலம் பணியாளர் ஒருவருக்கு மாதம் ரூபாய் 20610 ஊதியமாக வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றம்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு