சென்னையில் 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்!: மிக்ஜாம் புயல் காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை..!!

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் பல்வேறு பகுதிகளை தீவிரமாக பாதித்துள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடிக்கும் குறையாமல் இருந்தது.

இதனால் மக்கள் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு நாட்களில் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வரக்கூடிய சூழலில், பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 4 சனிக்கிழமைகளில் சென்னை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து வகை பள்ளிகளும் முழு நேரமாக செயல்பட வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, ஜனவரி 6, ஜன. 20, பிப்ரவரி 3, பிப். 17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு