வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 29ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், இன்று காலை மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், “தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இந்த புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் டிசம்பர 4ல் அதிகாலை தெற்கு ஆந்திரா – வட தமிழகத்தில் சென்னைக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும்.மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு இல்லை, “இவ்வாறு தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.இதேநிலை 5ம் தேதி வரை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். எனவே, கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் செல்ல தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வெள்ள நீர் வெளியேற வடிகால் வசதிகளை மேற்கொள்ளவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை