சென்னை கோயம்பேட்டில் வேலை செய்த கணவனை கொன்று எரித்த மனைவி காதலனுடன் கைது

ஜெயங்கொண்டம்: முந்திரிக்காட்டில் எரிக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. காதலனுடன் சேர்ந்து மனைவியே வெட்டிக்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெண்மான்கொண்டான் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் கடந்த மாதம் 29ம் தேதி ஒரு சடலம் எரிக்கப்பட்டு கிடந்தது. உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் எரிக்கப்பட்டது ஆண் சடலம் என்றும், அருகே உள்ள வடகடல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(43) என்பதும் தெரியவந்தது.

மேலும் சுரேசை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சுரேசுக்கு அனுப்பிரியா(30) என்ற மனைவி, 13 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். சுரேஷ் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். அனுப்பிரியாவின் சித்தப்பா மகனான ஆலவாயை சேர்ந்தவர் வேல்முருகன்(33). இவர் தங்கை என்ற முறையில் அனுப்பிரியா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் அதிகமாகி கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தெரிந்ததால் மனைவியை சுரேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் சுரேஷை கொலை செய்ய காதலன் வேல்முருகனுடன் அனுப்பிரியா திட்டமிட்டார்.

தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்து கொடுக்க வாருங்கள் என்று கடந்த 29ம் தேதி கணவர் சுரேஷை அனுப்பிரியா வரவழைத்தார். அதன்படி வந்த அவரை, அன்றிரவு இருசக்கர வாகனத்தில் வடகடல் கிராமத்துக்கு வெண்மான் கொண்டான் வழியாக கணவரை அனுப்பிரியா அழைத்து சென்றார். வெண்மான்கொண்டான் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்பு அருகே சென்றபோது தனக்கு மயக்கம் வருவதாக கூறி வண்டியை நிறுத்துமாறு அனுப்பிரியா கூறினார்.

இதையடுத்து பைக்கை நிறுத்தி விட்டு சுரேஷ் கீழே இறங்கி நின்றார். அப்போது முந்திரி தோப்பில் மறைந்திருந்த வேல்முருகன், வந்து சுரேஷை சரமாரியாக வெட்டி ெகாலை செய்தார். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் சுரேஷ் உடலை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து வேல்முருகன், அனுப்பிரியா ஆகியோரை நேற்று கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை