சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைத்து ஆக்கிரமிப்பு செய்வதால் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
சென்னை புழல் அடுத்த கதிர்வேடு செம்பியம் – செங்குன்றம் மாநில நெடுஞ்சாலை அருகில் தனியார் நிறுவனத்தின் டிரைலர் லாரி மற்றும் கன்டெய்னர் லாரி ஆகியவை நிறுத்தும் பார்க்கிங் உள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றி வரும் டிரெய்லர் லாரிகள் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் சைக்கிள் ஷாப் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு செல்வதால் சர்வீஸ் சாலையில் தினசரி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களை ஏற்றி செல்லும் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘புழல் சைக்கிள் ஷாப் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் தினசரி சாலையை ஆக்கிரமிப்பு செய்து லாரிகளை நிறுத்தி வைப்பதால் மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். ஒரு சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மின் விளக்குகள் வசதி இல்லாததால் வழிப்பறி, பாலியல் தொல்லை நடக்கிறது.

எனவே, மாதவரம் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகள் மீது அபராத தொகை விதித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும், இனி சர்வீஸ் சாலைகளில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தாமல் இருக்க ஏற்பாடும் செய்ய வேண்டும். இல்லையெனில் புழல், கதிர்வேடு பகுதி மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்