சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி திருவண்ணாமலை குளங்களை கலெக்டர், ஐகோர்ட் வக்கீல் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கலெக்டர் மற்றும் ஐகோர்ட் வக்கீல் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப்பாதையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 138 குளங்களில், 32 குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதை கடந்த 3ம் தேதி விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இதுபற்றி ஆய்வு செய்து, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர், அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குளங்களை கலெக்டருடன் இணைந்து ஆய்வு செய்ய ஐகோர்ட் வழக்கறிஞர் எம்.சி.சாமி என்பவரை உயர்நீதிமன்றம் நியமித்தது.

அதன்படி, வழக்கறிஞர் எம்.சி.சாமி நேற்று, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுடன் இணைந்து குளங்களை நேரில் ஆய்வு செய்தார். அக்னி லிங்கம், பாண்டேஸ்வரர் கோயில், பாண்டவ தீர்த்தகுளம், மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளதா என அவர்கள் பார்வையிட்டனர். இந்த ஆய்வு அறிக்கை விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை