சென்னை ஐஐடி 61வது பட்டமளிப்பு விழா இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட 444 பேருக்கு பிஎச்டி பட்டம்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பங்கேற்பு

சென்னை: சென்னை ஐஐடியின் 61வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டு மைய அரங்கில் நேற்று நடந்தது. ஐஐடி ஆட்சிமன்றக்குழு தலைவர் பவன் கோயங்கா தலைமை வகித்தார். விழாவில், 2012ம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிடெக், எம்டெக், எம்எஸ் படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், சிறப்பு விருதுகளையும் வழங்கினார்.

மொத்தம் 2,636 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். 444 பேர் பிஎச்டி எனப்படும் ஆராய்ச்சி பட்டம் பெற்றனர். அவர்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் விஞ்ஞானி சோம்நாத்தும் ஒருவர். ராக்கெட் மூலமாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்போது ஏற்படும் எலக்ட்ரான் அதிர்வுகளை குறைப்பது தொடர்பாக அவர் ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி ஆட்சிமன்றக்குழு தலைவர் பவன் கோயங்கா தலைமையுரையில், ‘‘இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வெகுவிரைவில் 3வது இடத்தை பிடிக்கும். 2047ம் ஆண்டு வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்கும் வகையில் நம் நாட்டின் பொருளாதார இலக்கு 30 முதல் 35 டிரில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பிஎச்டி பட்டம் பெற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசும்போது, ‘‘ஐஐடி நுழைவுத்தேர்வை சந்திக்கும் தைரியம் இல்லாத சாதாரண கிராமத்து மாணவனாக இருந்தேன். பெங்களூரு இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) முதுகலை பட்டம் பெற்றேன். தற்போது ஐஐடியில் பிஎச்டி பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நான் பிஎச்டி படிக்க அனுமதி வழங்கிய இந்திய விண்வெளித்துறைக்கும் எனது ஆராய்ச்சிக்கு வழிகாட்டிய ஐஐடி பேராசிரியர்களுக்கும் நன்றி’’ என்றார்.

முன்னதாக, ஐஐடி இயக்குநர் காமகோடி வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, ‘‘ஐஐடி படிப்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கலாச்சார இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டு வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

* பாலஸ்தீன போர் குறித்து பேசிய மாணவனால் திடீர் பரபரப்பு
ஐஐடி பட்டமளிப்பு விழாவில் படிப்பு, கல்வி அல்லாத இதர செயல்பாடுகள் போன்றவற்றில் சிறந்து விளங்கியதற்காக மாணவன் ஆதித்யாவுக்கு இந்திய குடியரசு தலைவர் பரிசும், பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா நினைவு பரிசும், அதேபோல், மாணவன் விக்ரமுக்கு சீனிவாசன் நினைவு பரிசும், மாணவன் ஜோயலுக்கு டாக்டர் சங்கர் தயாள் சர்மா பரிசும், தனஞ்செய் பாலகிருஷ்ணனுக்கு ஆளுநர் பரிசும் வழங்கப்பட்டன. சிறப்பு பரிசு பெற்ற மாணவர்கள் சார்பில் ஆதித்யாவும், தனஞ்செய் பாலகிருஷ்ணனும் ஏற்புரை ஆற்றினர்.

அவ்வாறு ஏற்புரையாற்றி பேசும்போது மாணவன் தனஞ்செய் பாலகிருஷ்ணன், பாலஸ்தீனத்தில் இனஅழிப்பு போர் நடக்கிறது என்று குறிப்பிட்டபோது மேடையில் அமர்ந்திருந்தவர்களும் அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் மற்றும் பேராசிரியர்களும் ஒரு கணம் திகைத்துவிட்டனர். கூட்டத்தில் இருந்த சிலர் தனஞ்செய் பாலகிருஷ்ணனின் பேச்சை பாராட்டும் வகையில் கரவொலி எழுப்பினர். தொடர்ந்த மாணவன் பேசியதாவது:

ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச இந்த மேடையை பயன்படுத்தாவிட்டால் மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டதாக கருதுவேன். நாம் அனைவரும் செயல்படுவதற்கான அழைப்பு இது. பாலஸ்தீனத்தில் மிகப்பெரிய அளவில் இனஅழிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள் அதிக எண்ணிக்கையில் இறந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவே இல்லை. பாலஸ்தீன விவகாரம் குறித்து உனக்கு என்ன அக்கறை என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம்.

ஸ்டெம் என்று சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கணித துறை, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆற்றலை தொன்று தொட்டு மேம்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொறியியல் மாணவன் என்ற முறையில் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரிய பதவிகளை பெற கடினமாக உழைக்கிறோம். அந்த நிறுவனங்களும் நமக்கு அதிக ஊதியத்துடன் வேலை வழங்குகின்றன.

அந்த வகையில் இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களை கொன்று குவிக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கி பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்குபெற்றிருக்கலாம். பாலஸ்தீன விவகாரத்தில் அவ்வளவு எளிதில் தீர்வு காண முடியாது. இதற்கு என்னிடமும் பதில்கள் இல்லை. அதேநேரத்தில் ஓர் இன்ஜினியராக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் நாம், தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இது நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை