செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னை-யாழ்ப்பாணத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்: சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதம்

மீனம்பாக்கம்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு வருகிற செப்டம்பர் 1ம் ேததி முதல் சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதுவரை காலை நேரத்தில் மட்டும் சென்னை- யாழ்ப்பாணம்-சென்னை விமானம் இயக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு, இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில், பகல் நேரங்களில் மட்டும் செயல்படக்கூடிய விமான நிலையத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியது.

அதோடு, சென்னை -யாழ்ப்பாணம்-சென்னை இடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கி நடத்தியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில், அந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பின்பு, கடந்த 2022 டிசம்பர் 12ம் தேதியிலிருந்து மீண்டும் சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை இடையே, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் விமான சேவையை தொடங்கி நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விமானம் காலை 10.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சென்றுவிட்டு, மீண்டும் பிற்பகல் 2.40 மணிக்கு, சென்னைக்கு திரும்பி வருகிறது. காலை நேரம் மட்டுமே, இந்த விமான சேவைகள் இயக்கப்படுவதால், பிற்பகலிலும், சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு, விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்கள் அதிகமாக வலியுறுத்தினர்.

இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வருகிற செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து, சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை இடையே, தினசரி விமான சேவையை தொடங்கி நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, செப்டம்பர் 1 தேதியில் இருந்து தினமும் பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், யாழ்ப்பாணத்திற்கு மாலை 3.10 மணிக்கு செல்கிறது.

அதன்பின்பு அதே விமானம் யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது. இந்த விமானத்தில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு பயண கட்டணம் ரூ.7,604. இதையடுத்து வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து சென்னை- யாழ்ப்பாணம்-சென்னை இடையே, தினமும் 2 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

காலையில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனமும், மாலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் விமான சேவைகளை தொடங்குகின்றன. இதனால் சென்னையில் இருந்து மாலையில் யாழ்ப்பாணம் செல்வதற்கு, விமான சேவை இல்லை என்ற குறைபாடு நீங்குகிறது. யாழ்ப்பாணம் சுற்றுலா தலமாக இருப்பதால் இந்த விமான சேவைகள் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!