சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 13 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் திருக்கோயில் வசம் சுவாதீனம்..!!

சென்னை அமைந்தகரை, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 13 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 4,480 சதுரடி பரப்பிலான கட்டிடம் தேவதாஸ் மற்றும் கோவிந்ததாஸ் ஆகியோருக்கு வணிக பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அதேபோன்று பெருமாள் கோயில் தெருவில் 5,780 சதுரடி பரப்பிலான கட்டிடம் கஸ்தூரி ஆயில் மில் என்ற நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

மேற்படி வாடகைதாரர்கள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால், சென்னை மண்டல இணை ஆணையர் – 2 அவர்களின் சட்டப் பிரிவு – 78 உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம். பாஸ்கரன் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மேற்படி கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் மொத்த பரப்பளவு 10,260 சதுரடி. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.13 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் திரு.கே.பாரதிராஜா, ஆய்வர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு