சென்னை புறநகரில் அதிகாலை பலத்த மழை 15 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அந்த நேரத்தில், துபாயில் இருந்து 262 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 314 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து 248 பயணிகளுடன் வந்த எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து 368 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புனேயில் இருந்து 140 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் பிராங்பர்ட்டிலிருந்து, சென்னை வந்த லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.

அதன்பின்பு துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. சுமார் ஒரு மணி நேரத்தில் மழை ஓய்ந்ததும், அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. அதேபோல, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பர்ட், அபுதாபி, சார்ஜா, தோகா, துபாய், டெல்லி, அகமதாபாத் என 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் விமானம், சென்னையில் இருந்து மீண்டும் அதிகாலை 4 மணிக்கு, துபாய்க்கு புறப்பட வேண்டியது, ஐந்தரை மணி நேரம் தாமதமாக, புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதைபோல் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு