சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில பயணிகளிடம் போலி டிக்கெட் மூலம் மாதம் ரூ.30,000 சுருட்டிய போலி டி.டி.ஆர் கைது: மோசடி பணத்தில் 2 மகள்களுக்கு திருமணம்; மகனை எம்பிஏ படிக்க வைத்தார்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி பணத்தில் 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்ததுடன், மகனை எம்பிஏ படிக்கவும் வைத்துள்ள தகவல் போலீசார் விசாரணையில் வெளியானது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் போல டிக்கெட் கவுன்டர் அருகே நின்றபடி ரயிலில் ஏறும் பயணிகளின் டிக்கெட்டுகளைப் வாங்கி பரிசோதித்து கொண்டிருந்தார். மேலும், ரயில் டிக்கெட் இல்லாதவர்களிடம் தன்னிடம் இருந்த பயணச் சீட்டுகளை விற்று பணம் வசூலித்து கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் ரயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். அப்போது டிக்கெட் கவுன்டர் அருகே புறநகர் ரயில் டிக்கெட் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த நபரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், மாதம் ஒரு முறை வந்து டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து தான் வைத்திருந்த டிக்கெட்டை விற்பதும், அங்கு ரயிலுக்காக காத்திருப்பவர்களிடம் சென்று டிக்கெட் பரிசோதனை செய்வதும், ஒரு வேளை பயணிகள் டிக்கெட் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு, போலியாக டிக்கெட் கொடுத்து பணம் வசூலிப்பதும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளிடம் உங்களுக்கு கன்பார்ம் செய்து தருகிறேன் என கூறி பணம் பெற்று மோசடி செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநில நபர்களையே குறிவைத்து மாதம் ரூ.30,000 மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இந்த பணத்தில் தனது இரு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தும், மகனையும் எம்பிஏ படிக்கவும் வைத்துள்ளார். அவர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு