சென்னையில் உள்ள 132 பேருந்து நிறுத்தங்களில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 132 பேருந்து நிறுத்தங்களில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி சார்பில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான நிழற்குடைகள் அசுத்தமாக காணப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும், போதை ஆசாமிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் வசிக்குமிடமாகவும் மாறியுள்ளது. பல நிழற்குடைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஆக.21ம் தேதி தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. அன்று ஒரே நாளில் 95.70 டன் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டன. 4 ஆயிரத்து 221 சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட 47 விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டன.

இந்த தீவிர தூய்மை பணியின்போது, எத்தனை நிழற்குடைகள் பழுந்தடைந்த நிலையில் உள்ளன என கணக்கெடுத்து, மாநகராட்சி தலைமைக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சியின் 1 முதல் 8 வரையிலான மண்டலங்கள் மற்றும் 10, 11 ஆகிய மண்டலங்களில் 132 நிகழ்குடைகள் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. அதை சீரமைக்க ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் ரூ.1 கோடியில் அவற்றை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்