Sunday, June 30, 2024
Home » கடத்தல் மையமாக மாறிய சென்னை விமான நிலையம்: சிக்காமல் பறந்து வரும் தங்க குருவிகள்

கடத்தல் மையமாக மாறிய சென்னை விமான நிலையம்: சிக்காமல் பறந்து வரும் தங்க குருவிகள்

by Ranjith

தங்கத்தை வாங்குவதில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2021-22ம் ஆண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியாவின் பணக்காரர்கள் பலர் அதை தங்கமாக மாற்ற ஆசைப்படுவதாலும் தங்க நுகர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது. மேலும், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிவேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. உலக பொருளாதாரத்தில் தங்கம் இல்லையேல் வணிகம் இல்லை என்ற நிலை இருக்கிறது. இதனால் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திவருவது தொடர்கிறது.

திருமணம், கிரகப்பிரவேசம், கடை திறப்பு விழா, பேஷன் ஷோ என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்க நகைகளை அணிந்தபடி செல்வதை கவுரவமாக கருதுகின்றனர். எனவே, தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கம் விலை குறைவாக விற்கப்படும் நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் அவற்றை இந்தியாவுக்கு பல வழிகளில் கடத்தி வருகிறார்கள். தற்போது ஆண்டுக்கு 380 டன் தங்கம் கடத்தி வரப்படுவதாக, இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுவும் விமானங்கள் மூலம் நடக்கும் தங்க கடத்தலே அதிகம் என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

குறிப்பாக, சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விமான நிலையத்தில் நடைபெறும் சோதனையின் போதும், அதிகாரிகளுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையிலும், கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபட்டும் வருகிறது. ஆனாலும், தங்கக் கடத்தலை கைவிடுவேனா என்று, டிசைன் டிசைனாக நூதன வழிகளில் தங்கக் கடத்தலை அரங்கேற்றி வருகின்றனர். ‘தங்கத்தை இப்படி எல்லாம் கடத்தலாமா?’ என சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர் கடத்தல்காரர்கள். அந்தளவுக்கு நூதனமான யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் இருந்து தினசரி துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 25 முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இரண்டு ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது மீண்டும் புயல் வேகத்தில் அதிகரிக்க அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், விமானநிலைய ஊழியர்களின் கண்காணிப்பை மீறி தங்கம் கடத்தல் நீடித்து வருகிறது.

தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க சினிமா பாணியில் விதவிதமாக யோசித்தாலும் அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து கைதும் செய்து வருகின்றனர். ஷூ, பெல்ட், சூட்கேஸ், தலைமுடி, உள்ளாடை மற்றும் உடல் உறுப்புகளில் மறைத்து வைத்து தங்கத்தை கட்டியாகவும், கம்பிகளாகவும், உருக்கியும் புதுப்புது மாடல்களில் கடத்தி வரும் சம்பவம் நீடித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதை தடுக்க முடியவில்லை. இதற்கு, சுங்கத்துறையில் இருக்கும் சில அதிகாரிகள் உதவியாக இருப்பதால் பல சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை என்ற தகவலும் அதிர்ச்சியை தருகிறது.

தங்க கடத்தல் மட்டுமல்ல சமீப காலங்களாக வெளிநாடுகளில் இருந்து அரிய வகை குரங்குகள், பாம்பு குட்டிகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் கடத்தலும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இவை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற முழு விவரம் கிடைப்பதிலை. மேலும், இந்த தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினாலும் அவர்களின் பின்னணி மற்றும் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. தங்கம் கடத்தலில் பிடிபடும் நபர்கள் தொடர்ந்து இதே போல் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கமிஷன் அடிப்படையில் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் பெரிய அளவில் தங்கம் கடத்தல் கும்பல் நெட்வொர்க் அமைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது.

ஆனால் அவர்களை அதிகாரிகளால் கூண்டோடு பிடிக்க முடியவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக வரும் பயணிகளை சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பார்கள் என்பதால் அவர்கள் இலங்கை, சிங்கப்பூர் மலேசியா வழியாக சென்னைக்கு வருவதாகவும், தற்போது இலங்கை வழியாக வரும் விமானங்களில் கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்தும் உள்ளது. இதனால் தங்கம் கடத்தலில் சென்னை முக்கிய மையமாக மாறி வருகிறது.

இதில் ஈடுபடுபவர்களை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகளும் விமானநிலைய அதிகாரிகளும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் குருவிகளாக மட்டும் இருப்பதால் அவர்களுக்கு மூளையாக செயல்படும் நபர்கள் சிக்குவதில்லை. எனவே, தங்கம் கடத்தலில் இருக்கும் முக்கிய புள்ளிகளை பிடித்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இப்படி சென்னை விமான நிலையம் தங்க கடத்தலின் மையமாக மாறி இருப்பது இந்திய அளவில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமான பயணிகள் 113 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள் என சுமார் ரூ.14 கோடி மதிப்புடைய பொருட்கள் பிடிபட்டது.

இவர்கள் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளாகவும், தங்கப் பசைகளாகவும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். சிலர் சூட்கேஸ் லைனிங் உள்ளே தங்கத்தை ஸ்பிரிங் கம்பிகளாகவும் மறைத்து வைத்திருந்தனர். அதோடு சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி அதில் தான் ஐபோன்கள் போன்ற பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர். இந்த 113 பேர் மீது சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் என்பது ஊர்ஜிதமானது. ஆனால், இவர்களை இயக்கும் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவர்கள் யார், சம்பந்தப்பட்ட விஐபிகள் யார் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

*கடத்தலை தடுக்க தீர்வுதான் என்ன
விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் நேர்மையாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறால் சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வனவிலங்கு கடத்தி வருவது, வெளிநாட்டு பணங்கள் எடுத்துச் செல்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதை மீறி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வரும் அதே நபர்கள் மீண்டும், மீண்டும் கடத்தி வருவது வாடிக்கையாக இருக்கிறது.

புதுப்புது ஆட்களை கடத்தலில் ஈடுபட செய்வதும் நடந்து வருகிறது. விமான நிலையத்தில் என்னதான் சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களை பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்தாலும் முடிவில் அவர்களை காவல்துறையினரிடம் தான் ஒப்படைப்பார்கள். அவர்கள்தான் சம்பந்தப்பட்டவர்களின் குற்றத்திற்கு ஏற்ப வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் போலீசார் அவர்கள் மீது சுங்கத்துறை கடத்தல் பிரிவில் வழக்கு மட்டும் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதும், புதிதாக கடத்தல் மீதும் இரண்டு, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தால் தான் மீண்டும் அவர்கள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட தயங்குவார்கள், பயப்படுவார்கள்.

ஆனால் போலீசாரோ சாதாரண வழக்கு பதிவு செய்வதால் அவர்கள் எளிதாக வெளியே வந்து மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் பஸ் நிலையம், முக்கிய ரயில் நிலையம், போலீஸ் நிலையங்களில் ஒட்டப்படுவதை போல் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளியின் புகைப்படங்கள் வெளிப்படையாக சென்னை விமான நிலையத்தின் பகுதிகளில் ஒட்ட வேண்டும். இதனால் பொதுமக்கள் கடத்தல் ஆசாமிகளை எளிதாக அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தரலாம். மேலும் விமான நிலையத்தில் பல்வேறு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியும். அப்படி செய்தால் ஓரளவு கடத்தலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

*கடத்தல் கும்பல் தப்பிப்பது எப்படி?
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் நபர்களிடம் அவற்றை எங்கு ஒப்படைக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுவதில்லையாம். விமான நிலையம் வந்தடைந்ததும் ஒரு குறிப்பிட்ட, ‘மொபைல் போன்’ எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அந்த எண்ணை அழைத்து சொன்னதும், சம்பந்தப்பட்ட நபர் வந்து பொருளை வாங்கி செல்வார்.

ஒருவேளை கடத்தி வந்தவர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டால், அவர் தொடர்பு கொள்ள இருந்த, ‘சிம் கார்டு’ உடனடியாக அழிக்கப்பட்டு விடும். இதனால், கடத்தல் கும்பலை கண்டறிய முடியாமல் போகிறது. இப்படி பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்கள், ‘செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ வாயிலாக ரிசர்வ் வங்கியிடம் வழங்கப்படுகிறது.

*1 கிலோ தங்கம் கடத்தினால் ரூ.10 லட்சம்
வெளிநாடுகளில் இருந்து ஒரு கிலோ தங்கம் கடத்தி வருபவர்களுக்கு, ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளில், ‘பிளம்பர், மெக்கானிக், வாட்ச்மேன்’ உள்ளிட்ட பணிகளில் வேலை பார்க்கும் இந்தியர்களை வைத்தே தங்க கடத்தல் அரங்கேற்றப்படுகின்றன. இந்தியா வந்து செல்ல அவர்களுக்கு இலவசமாக விமான டிக்கெட் வழங்குவதுடன், அவர்கள் தரும் பொருளை எடுத்து சென்று சேர்த்தால், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணமும் அளிக்கப்படுகின்றன.

இப்படி எடுத்து வரப்படும் தங்கம், கட்டிகள், ‘பேஸ்ட்’ ஆபரணம், கைக்கடிகாரம், கேப்சூல்’ வடிவங்களில் எடுத்து வரப்படுகின்றன. தொழிற்சாலை உதிரி பாகங்கள், கதவு கைப்பிடிகள், ‘வால்வு’கள், ‘வாஷர்’கள் உள்ளிட்ட பொருட்களின் வடிவிலும் எடுத்து வரப்படுகின்றன. இங்கு வந்து சேர்ந்த பின் அவை தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

*பாதி பேர் கூட பிடிபடுவதில்லை: வழக்கறிஞர்கள் அதிர்ச்சி தகவல்
தங்க கடத்தல் குறித்து, சுங்கத்துறை வழக்குகளை கையாளக்கூடிய வழக்கறிஞர்கள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கொண்டு வருகிறவர்களில் 40 சதவீதம் பேர் தப்பிவிடுகின்றனர். வெகுசிலரே சிக்குகின்றனர். அங்கிருந்து விமானம் புறப்படும்போது பயணிகளின் உடமைகள் ஸ்கேனிங் செய்யப்படும். அப்போது எந்த பெட்டியில் தங்கம் உள்ளது என்பது தெரிந்து விடும். அந்த விமானம் எந்த ஊருக்குச் செல்கிறது என்பதையறிந்து நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கொடுத்து விடுவார்கள். அந்த வகையில் உளவுத்துறையின் தகவல் சரியாக இருந்தால், கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள். அதேநேரம், விமான நிலைய சோதனையையும் மீறி 30 முதல் 40% பேர் தப்பித்து விடுகின்றனர்.

சென்னை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்கள் மூலமாக தங்கம் கடத்தப்படுவதும் அதற்கு சில அதிகாரிகளே உடந்தையாக இருப்பதும் அதிர்ச்சியளிக்கும் விஷயம். தங்கக் கடத்தல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், ஒருவர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் குறிப்பிட்ட அளவு தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரலாம். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுகிறவர்கள் அனைவருமே கடத்தலுக்காகவே செல்கிறவர்கள். அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பார்த்தாலே நிறைய தகவல்கள் கிடைக்கும். அவர்களுக்கு துபாய், சிங்கப்பூரில் எந்த வேலைகளும் இருக்காது. சுற்றுலா விசாவில் 2 அல்லது 3 வாரம் செல்வார்கள். அங்கு தங்கம் புழங்குவதற்கு எந்தவித தடைகளும் இல்லை.

தங்கத்தை முறையாகக் கொண்டு வருகிறவர்கள், வெளிநாடுகளில் பணி நிமித்தமாக 6 மாதங்களுக்கும் மேல் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் எந்தவித சிக்கல்களும் இல்லை. விமான நிலையங்களில் கிரீன் சேனல், ரெட் சேனல் என 2 வழிகள் இருக்கும். தன்னிடம் எதுவும் இல்லை என்பவர்கள் கிரீன் சேனல் வழியாகச் சென்று விடலாம். அதுவே, சுங்கத் தீர்வை போடுவதற்கான பொருட்கள் இருந்தால் ரெட் சேனல் வழியாக வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகளிடம் தன்னிடம் உள்ள பொருட்களைக் குறிப்பிட்டால் அதற்கேற்ப தீர்வை போடுவார்கள். இவ்வாறு வழக்கறிஞர்கள் கூறினர்.

*பாஸ்போர்ட் சொல்லும் சங்கதி
மேலும் சில வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘‘தங்கத்தை கடத்தி வந்து பிடிபடுகிறவர்கள் எல்லாம் தன்னிடம் என்ன இருக்கிறது என சுங்கத்துறைக்கு எந்தவிதத் தகவலையும் தெரிவிக்காமல் வருகிறவர்கள் தான். இந்த விவகாரத்தில் கிரீன் சேனல் வழியாக வருகிறவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கின்றனர். பயணியின் நடை, உடை, பார்வை ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களின் உடமைகளை ஆய்வு செய்வது ஒரு வகை. இவர்களில் சிலர் சூட்கேஸ், தொப்பி, தொலைக்காட்சி, லேப்டாப் என விதவிதமான முறைகளில் தங்கத்தைக் கொண்டு வருவார்கள். குறிப்பிட்ட பயணியின் பாஸ்போர்ட்டை பார்த்தால் மிகச் சாதாரண மனிதர்களாக இருப்பார்கள்.

ஆனால், 6 மாதத்தில் 8 முறை துபாய் சென்றிருப்பார்கள். விமானத்தை விட்டு இறங்கும் போது இமிக்ரேஷன் கிளியரன்ஸ் வாங்க வேண்டும். அப்போது பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் அடித்துக் கொடுப்பார்கள். ஒரு மாதத்தில் எத்தனை முறை சென்றார்கள் என்பதைப் பொறுத்து சந்தேகம் எழும். இவ்வாறு பிடிபடுகிறவர்களை குருவிகள் என்பார்கள். இவர்கள் கடத்தல்காரர்கள் இல்லை. தங்கத்தைக் கொண்டு வந்து கொடுக்கக் கூடிய தரகு வேலையை மட்டும் பார்ப்பார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி கொடுப்பார்கள். பொதுவாக, இவர்களின் பின்னணியில் உள்ள நெட்வொர்க் தொடர்பான விவரம் குருவிகளுக்கு தெரிவதில்லை. வேறு சிலர் சொந்தமாக தானே தங்கத்தைக் கடத்துவார்கள்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi