பயணிகள் கவனத்திற்கு.. சென்னை-செங்கோட்டை இடையே செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னை – செங்கோட்டை தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு, குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கவும் தண்டவாளங்களில் ஏற்படும் பழுதுகளை தவிர்க்கவும் அவ்வப்போது குறிப்பிட்ட ரயில்வே கோட்டங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது;

ஆக.15-ல் சென்னை – செங்கோட்டை பொதிகை (12661) ரயில் விழுப்புரத்துக்கு 30 நிமிடம் தாமதமாக செல்லும். ஆக.16 மற்றும் 17-ல் பொதிகை ரயில் (12661) விரைவு ரயில் சென்னைக்கு பதிலாக செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு புறப்படும். ஆக.14 முதல் 17 வரை செங்கோட்டையிலிருந்து கிளம்பும் ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும். ஆக.16-ல் சென்னை – செங்கோட்டை (20681) சிலம்பு ரயில் விழுப்புரத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். ஆக.17-ல் சிலம்பு விரைவு ரயில் (20681) சென்னை செங்கோட்டை இடையே முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை – கொல்லம் விரைவு ரயில்: ஆக.15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். கொல்லம்-சென்னை விரைவு ரயில்: ஆக.17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு