சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: பிளாட்பாரத்தில் மோதி விபத்து; 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

திருமலை: சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திடீரென பிளாட்பாரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நாம்பள்ளி ரயில் நிலையத்துக்கு செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டது. நாம்பள்ளி ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 8.10 மணிக்கு வர வேண்டிய ரயில் 1 மணிநேரம் தாமதமாக காலை 9.10 மணிக்கு வந்தடைந்தது. அங்கு 5வது பிளாட்பாரத்தில் ரயில் இறுதியாக நிற்கும் இடம் என்பதால் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரயில் இன்ஜின் நிற்காமல் பிளாட்பாரத்தின் இறுதியில் சென்று மோதி விபத்துக்குள்ளானது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் பொதுப்பயணிகள் பயணித்த 5 பெட்டிகள் தடம் புரண்டு பயணிகள் காத்திருக்கும் பிளாட்பாரத்தின் பக்கவாட்டில் சாய்ந்து நின்றது. மேலும் ரயில் மெதுவாக இயங்கியதால் இறங்க முயன்றவர்களில் 50 பயணிகள் காயமடைந்தனர். அதேபோல் ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளில் சிலர் லேசான காயமடைந்தனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் காயமடைந்த 50 பயணிகள் லாலாகூடாவில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில் மெதுவாக இயக்கப்பட்டதாலும், தடம் புரண்ட பெட்டிகள் முழுமையாக கவிழாமல், பிளாட்பாரத்தில் சாய்ந்து நின்றதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக குறிப்பிட்ட சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது