சென்னையில் போலி இறப்பு சான்றிதழ் பெற்று கள்ளக்காதலியின் ₹20 கோடி சொத்தை அபகரித்த காதலன்: போலீசில் தாய் கண்ணீர் புகார்

ஜோலார்பேட்டை: போலி இறப்பு சான்றிதழ் பெற்று சென்னையில் ₹20 கோடி மதிப்பிலான சொத்துகளை மகளின் கள்ளக்காதலனும் அவரது மகனும் அபகரித்ததாக திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் 85 வயது மூதாட்டி புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியை சேர்ந்தவர் லீலாவதி (85).

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் உறவினர்களுடன் வந்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு 2 மகள்கள், 2 மகன்கள். மூத்த மகள் சாந்தி, ஆந்திர மாநிலம், பாகாலாவை சேர்ந்த பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது காதலை நாங்கள் ஏற்கவில்லை. இதனால் பிழைப்பு தேடி கணவருடன் சென்னைக்கு சென்றார். கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் சாந்தி காப்பாளராக பணியில் சேர்ந்தார். இவர்களுக்கு கிஷோர்குமார் என்ற மகன் உள்ளார். சில ஆண்டுகளில் அந்த விடுதி உரிமையாளர் விடுதியை நடத்த முடியாமல் மூடியுள்ளார். இதனால் சாந்தி என்னிடம் பணத்தை பெற்று விடுதியை வாங்கினார். மேலும் சென்னையில் பல இடங்களில் விடுதி வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் நங்கநல்லூரை சேர்ந்த கிரிராஜ் என்பவரை விடுதியின் மேனேஜராக வேலைக்கு சேர்த்தார். கிரிராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், சாந்தியுடன் தகாத உறவு ஏற்பட்டது. இதனை அறிந்த சாந்தியின் கணவர் பாபு, மனைவியுடன் தகராறு செய்துவிட்டு, சொந்த ஊரான ஆந்திர மாநிலம் பாகாலாவுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் சாந்தியின் கள்ளக்காதலனான கிரிராஜ், சாந்திதான் தனது உண்மையான மனைவி என்பதுபோல் ஆவணங்களை தயாரித்துள்ளார். இதற்கிடையில் சாந்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அவரது பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும், கிரிராஜ் தன் வசப்படுத்தியுள்ளார். அதனை தனது பெயரில் மாற்ற முயன்றபோது, வாரிசு சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தேவைப்பட்டது.

குறிப்பாக சாந்தியின் தாயான எனது சான்றிதழ் தேவைப்பட்டது. நான் உயிரோடு இருக்கும் நிலையில், இறந்துவிட்டதாக கூறி போலியாக எனது இறப்பு சான்று பெற்று ₹20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்துக்கொண்டார். எனது பேரன் கிஷோர்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் நானும் வசித்து வருகிறேன். ஆனால், கிரிராஜ், கிஷோர்குமாருடன் தகராறு செய்து வீட்டை விட்டு துரத்தி அத்துமீறி அபகரிக்க முயல்கிறார். இதுகுறித்து கிஷோர்குமார் சென்னை போலீசில் பலமுறை புகார் அளித்துள்ளார்.

எனவே இறப்புச்சான்று பெற்று சொத்தை அபகரித்த கிரிராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன் கிரண்குமார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நத்தம் அருகே காதலியை ஏர் கன்னால் சுட்ட காதலன்

பாரா ஒலிம்பிக்கில் இன்றிரவு நிறைவு விழா; 29 பதக்கத்துடன் இந்தியா16வது இடம்; ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் சிங்

வெளிநாடு சென்று இந்தியா திரும்விய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை பாதுப்புக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு