சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிரட்டி பணம் பறிப்பு; போலி ஐ.டி அதிகாரிகள் கும்பல் கைது

திருச்சி: வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணம் பறிப்பில் ஈடுபட்ட 8 பேர் கும்பல் திருச்சியில் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (44). வீரப்பூரில் மருந்துகடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி காரில் இவரது கடைக்கு வந்த 5 பேர் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரி என கூறி சோதனை நடத்தினர்.

பின்னர் சுதாகரை தங்கள் காரில் ஏற்றி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றனர். அங்கிருந்தபடி சுதாகர் குடும்பத்தாரிடம் ₹20 லட்சம் பணம் கேட்டுள்ளனர். சந்தேகமடைந்த அவர்கள் திருச்சி எஸ்பி அலுவலக உதவி எண் 94874 64651 க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடும் பணி முடுக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் மஞ்சம்பட்டி அருகே பதுங்கியிருந்த மோசடி கும்பலை தனிப்படையினர் சுற்றி வளைத்து சுதாகரை மீட்டனர். அங்கிருந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தையடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்த நவுஷாத் (45), திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வைரிசெட்டிபாளையத்தை சேர்ந்த சேகர்(42), வளையப்பட்டியை சேர்ந்த சுதாகர் (44), மதுரை மாவட்டம் கோசாகுளத்தை சேர்ந்த மாரிமுத்து(53), சென்னை ஆவடியை சேர்ந்த வினோத் கங்காதரன்(37) மற்றும் சுதாகரை கடத்த உடந்தையாக இருந்த மணப்பாறை ஆளிப்பட்டி கார்த்திகேயன்(37) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், இந்த கும்பல் துறையூரிலுள்ள சவுடாம்பிகை அம்மன் தெருவை சேர்ந்த ஒருவரிடம் வருமான வரித்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி, ₹5.18 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. துறையூர் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மணப்பாறை தொப்பம்பட்டி சக்திவேல்(32), தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த மணிகண்டன்(29) ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான 8 பேர் கும்பலிடம் இருந்து ₹5 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரண்டு டூவீலர்கள் மற்றும் 8 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். கைதானவர்கள் மீது சென்னை, கோவை, கடலூர், சேலம், திருப்பூர், வேலூர், திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களிலும் திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் மற்றும் அரசு துறை அதிகாரிகள் என கூறி பணம் பறித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மணப்பாறை மற்றும் துறையூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணைக்கு பின்னர் திருச்சி ஜே.எம்.3 நீதிமன்றத்தில் 8 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு