Wednesday, July 3, 2024
Home » சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இணையவழி மூலமே பெறப்படுவதால் இந்த ஆண்டு விண்ணப்பங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இணையவழி மூலமே பெறப்படுவதால் இந்த ஆண்டு விண்ணப்பங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இணையவழி மூலமே பெறப்படுவதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மற்றும் பிற இணையவழி சேவைகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) இணையவழி சேவையில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒற்றை சாளரமுறை அடிப்படையில் இணையவழி (Single Window Online Planning Permission Application System) திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி, மே மாதம் 2022-ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி காணொளி, திட்ட அனுமதி மென்பொருள் தடையில்லா சான்றிதழ் வழங்கும் 12 துறைகளான சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL), பொதுப்பணித்துறை (PWD), நீர்வள ஆதாரத்துறை (WRD), தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), எல்காட் நிறுவனம் (ELCOT), வனத்துறை (Forest), புவியியல் மற்றும் சுரங்கத் துறை (Geology & Mines), சிட்கோ (SIDCO), நெடுஞ்சாலைத்துறை (State Highways), தெற்கு ரயில்வே (Southern Railway), மாவட்ட நிர்வாகம் (Collectorates) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (DFRS) ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கூர்ந்தாய்வு செய்யப்படும் திட்ட அனுமதி சேவைகள் 17.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட அனுமதி மென்பொருள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) & நகராட்சி நிர்வாக இயக்குநரகம் (DMA) மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (RDPR) & பேரூராட்சிகள் இயக்ககம் (DTP) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநர்கள், கட்டிடப் பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் ஆகியவர்களுக்கு இணையதள திட்ட அனுமதி விண்ணப்பம் சமர்ப்பிப்பது, கையாளுவது சம்பந்தமாக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு, இந்த அமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட பல்வேறு நேர்முக பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும். இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27%-ஆக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22%-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டடங்களுக்கு (HRB) வழங்கப்படும் திட்ட அனுமதி பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல உயரம் அல்லாத கட்டடங்களுக்கான (NHRB) திட்ட அனுமதி விண்ணப்பங்கள் 2022-ஆம் ஆண்டு 641 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 455 திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு 837 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 605 திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இணையவழி மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 29%- ஆகவும் மற்றும் திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை 24%-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணையவழி திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கான மென்பொருளில் தற்போதுள்ள செயல்முறையை (work-flow) எளிமையாக்க ரீ- இன்ஜினியரிங் (Re-Engineering) செய்ய உத்தேசித்துள்ளது. இதன் மூலம், திட்ட அனுமதி வழங்குவதற்கான கால அளவு 60-லிருந்து 30-ஆக குறையும், திட்ட அனுமதி வழங்கப்படும் எண்ணிக்கையும் உயரும்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி செயல்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

sixteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi