செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி நாளை மறுநாள் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை அம்மா உணவகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல்லாவரம் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு இல்லாதவர்களுக்கும் வரி விதிக்கப்படுகிறது.

கீழ்கட்டளை பெரிய ஏரி மற்றும் பல்லாவரம் ராயப்பேட்டை ஏரிகளிலும் கலப்பதால் நீர் மாசடைகிறது. தாம்பரம், பல்லாவரம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களின் நடமாட்டத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளையும், கல்வெட்டுகளையும் அகற்றி வருகிறார்கள். கீழ்கட்டளை பெரிய ஏரி மற்றும் பல்லாவரம் ராயப்பேட்டை ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அடிப்படை தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றி தர அரசை வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி அதிமுக சார்பில் 12ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணியளவில், `பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் (வேம்புலி அம்மன் கோயில்)’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டம், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா முன்னிலையிலும் நடைபெறும். இந்த பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து ெகாள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு

பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து