செங்கல்பட்டில் ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் விளையாட்டு துறையின் தலைநகரமாக தமிழ்நாடு நிச்சயம் உருவெடுக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாடு நிச்சயம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உருவெடுக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து ஊராட்சிகளுக்கும் ‘டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தை அறிவித்து இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளுக்கும் 784 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

அப்போது, அவர் பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இரண்டுமே ஏராளமான விளையாட்டு வீரர்களை நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடக்க உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு நிச்சயமாக முதல் இடம் அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. 2009 முதல் தமிழ்நாடு சார்பாக பல்வேறு சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் நீச்சல் போட்டி சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு இதுவரை 101 பதக்கங்கள் வென்றுள்ளார் சகோதரர் தனுஷ்.

தனுஷ் மாதிரியான விளையாட்டு வீரர்களால் தமிழ்நாடு நிச்சயம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உருவெடுக்கும் என்பதில் எனக்கும் கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு தொடர்ந்து நாங்கள் உதவிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை