செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மகேந்திரசிட்டி பகுதியில், திருச்சி-சென்னை மார்க்கத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தனக்கு முன்னால் சிக்னலில் நின்றிருந்த 5 வாகனங்கள்மீது அடுத்தடுத்து ஒரு தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பலர் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி, மதுரை உள்பட பல்வேறு தென்மாவட்டங்களில் இருந்து 2 நாள் வார விடுமுறை முடிந்து, நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 10 மணிவரை செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னை மார்க்கத்தில் அரசு பேருந்து, தனியார் ஆம்னி பேருந்து உள்பட பல்வேறு வாகனங்கள் மூலமாக ஏராளமான பயணிகள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதனால் செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இந்நிலையில், ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில், திருச்சி-சென்னை செல்லும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டு அருகே மகேந்திர சிட்டி அருகே இன்று காலை 9.30 மணியளவில் போக்குவரத்து சிக்னலுக்காக ஏராளமான வாகனங்கள் சுமார் 3 கிமீ தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தன. அப்போது திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிவந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்து, தனக்கு முன்னால் சிக்னலில் நின்றிருந்த வேன், 2 பைக் மற்றும் 2 கார் என மொத்தம் 5 வாகனங்களின்மீது அடுத்தடுத்து தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதியது. இவ்விபத்தில் தனியார் ஆம்னி பேருந்து உள்பட 5 வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. எனினும், தனியார் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகளுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ எவ்வித லேசான காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களையும் கிரேன் மூலம் அகற்றி, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து டிரைவரை பொத்தேரியில் உள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை