செங்கல்பட்டு அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும்: மாணவ, மாணவிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ராஜேஷ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல் உள்ளிட்ட 15 பாடப்பிரிவுகள் மற்றும் முதுநிலை, ஆராய்ச்சி படப்பிரிவுகள் ஆகியவை உள்ளன. இந்த கல்லூரியில், செங்கல்பட்டு மட்டுமின்றி மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 2,750 மாணவிகள் உட்பட 4,200 பேர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், கல்லூரி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறைகள் இல்லை என கூறப்படுகிறது.

இதனால், இடநெருக்கடியுடன் மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களில் வகுப்பறைகள் செயல்பட்டு வருவதால் கடும் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்ளை விட, கிராமப்புற மாணவர்கள் அதிகமாக படித்து வருவதால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர ஆர்வம் கட்டப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி தரப்பில், கூடுதலாக 30 வகுப்பறைகள், கலையரங்கம், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி நிர்வாகம் கருத்துரு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களின் நலன் கருதி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், எம்பி செல்வம் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் வகுப்பறைகள் கட்ட நிதி உதவி வழங்கக்கோரி கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி, கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்ய அரசு மற்றும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்