கெமிக்கல் இல்லாத ஹேண்ட் மேட் சோப்

நம்முடைய தனித்தன்மை வாய்ந்த தோல் பரா மரிப்புத் தேவைகளுக்குச் சிறந்த சோப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது எப்போதுமே சவாலான ஒன்றாகவே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அந்தந்த சருமத்திற்கேற்ற சிறந்த சோப்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியம். நமது சருமத்தைப் பொலிவுபடுத்த மற்றும் கரும்புள்ளி, முகப்பரு போன்றவற்றை தடுக்க நாம் அனைவரும் தரமான சோப்பைத் தேர்ந்தெடுப்பது ரொம்பவுமே அவசியமாகிறது. அதற்காக நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து பயன்படுத்தினால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம், அதே சமயம் அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் ஈட்டலாம் என்கிறார் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சுகன்யா…

ஹேண்ட் மேட் சோப் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது எப்படி?

இதனை எனது மகளுக்காகத் தான் முதலில் ஆரம்பித்ததே. அவள் premature குழந்தை. அவள் பிறந்து 6 மாதங்கள் வரை அவளை குளிப்பாட்ட கூடாது என டாக்டர் சொல்லிவிட்டார். அவளது தோல் ரொம்ப மென்மையா சென்சிடிவாக இருக்கும். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் மனதில் உதித்தது. நாமே ஒரு சோப் தயாரித்து பயன்படுத்தினால் என்ன என்பது தான் அது. அப்படி ஆரம்பித்தது தான் இந்த handmade சோப் பிசினஸ் . சோப் சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு. ஆனால் சோப் பிசினஸ் செய்ய ஆரம்பித்தது கடந்த மூன்று வருடங்களாகத் தான்.

எத்தனை வகையான சோப்களை தயாரிக்கிறீர்கள்?

தற்போது நான் மொத்தம் 12 வகையான சோப்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். நலுங்குமாவு, சார்க்கோல், சியா பட்டர், ரெட் சான்டில் வுட், துளசி வேம்பு, மார்னிங் நீம், பீட்ரூட், அதிமதுரம், பூவரசன், வெட்பாலை, பிரஞ்சு பிங்க் கிளை, காபி என பன்னிரண்டு வகை சோப்களை தயாரித்து வருகிறேன். மேலும் சில வகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் தற்போது செயல்பட்டு வருகிறேன். தற்போது வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் விரும்பிய ப்ளேவரில் விரும்பிய வடிவத்தில் செய்தும் தருகிறேன். ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவர்களின் சருமத்திற்கேற்ற சோப் வகைகளை பரிந்துரை செய்தும் வருகிறேன்.

வீட்டிலேயே சோப் தயாரிப்பது எளிதானதா?

நம் வீட்டு அறையின் ஒரு பகுதியிலேயே சுலபமாக குளியல்சோப்களை தயாரிக்கலாம். இதற்கு பெரிய அளவிலான இடவசதிகள் ஏதும் தேவையில்லை. இதற்கென அதிகளவிலான முதலீடுகளும் தேவையில்லை, குறைந்த முதலீடுகளே போதுமானது. அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. தினமும் குறைந்த நேரம் ஒதுக்கினால் கூட போதும். இந்த சோப் தயாரிப்பின் மூலம் நிரந்தரமான வருமானத்தை ஈட்டிக்கொள்ள இயலும். பெண்களுக்கு ஏற்ற சிறந்த சிறுதொழில் இது. குறைந்த முதலீட்டில் தைரியமாக எளிதாக தங்களது தொழிலை நிலை நிறுத்திக் கொள்ள இயலும்.

இதற்கான விற்பனை வாய்ப்புகள் எப்படி உள்ளது?

நான் முதலில் நமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடம் விற்பனை செய்தேன். அவர்களின் வாய்மொழி விளம்பரங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தனர். அடுத்த கட்டமாக அக்கம்பக்கத்துக் கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் கொடுக்கலாம் என்கிற ஐடியா இருக்கிறது. நமது தயாரிப்புகளின். தரம் நிறைவாக இருக்கும் பட்சத்தில் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும். நமது வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கஸ்டமைஸ்டாக தயாரித்து விற்பனை செய்துவந்தால், தொடர்ந்து நிரந்தரமான வாடிக்கையாளர்களை பெறுவதுடன் வீட்டிலிருந்தே எளிய முறையில் சம்பாதிக்கலாம். இந்த தொழிலில் வாடிக்கையாளர்களை முதல் முறையில் கவர்ந்து விட்டால் போதும். நமது விற்பனைக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பது நிச்சயம். தற்போது இணையதளங்களும், சமூக வலைத்தளங்களும் நமது தயாரிப்புகளுக்கான சந்தைப்படுத்தலை செவ்வனே செய்து தருகிறது. எனது தயாரிப்பின் தரம் எனது வியாபார எல்லையை மேலும் விரிவுபடுத்தி வருகிறது என்றால் அது
மிகையில்லை.

ஹேண்ட் மேட் சோப்புகளுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

இப்பொழுது சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் அதிகளவு கெமிக்கல் இருப்பதினால், தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சிலருக்கு அதிகமாக ஏற்படுகிறது. எனவே அதிகளவு கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை நம் வீட்டில் இருந்த படியே தயாரித்து தரமானதாக விற்பனை செய்தால் அதற்கு அதிக வரவேற்பு கிடைப்பதோடு, நம்மால் தொடர்ந்து வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்தவும் முடிகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேண்ட் மேட் சோப்களால் பல சருமப் பிரச்னைகளை சரி செய்யவும் முடிகிறது. அதனால் பலரும் தற்போதைய காலகட்டத்தில் ஹேண்ட் சோப் பயன்பாட்டிற்கு மாறி வருகிறார்கள்.

இந்த சோப்களின் சிறப்பம்சம் என்ன?

என்னுடைய சோப்புகளை சுத்தமான செக்கு எண்ணெயை மட்டுமே பயன்படுத்தி செய்து வருகிறேன். கெமிக்கல்கள் இல்லாமல் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சோப்களை தயாரிக்கிறேன். என்னுடைய நலுங்குமாவு சோப் 25 வகையான மூலிகைகள் கொண்டு செய்யப்படுகிறது. பழங்காலத்தில் மக்களின் குளியலுக்குப் பயன்படுத்தப்பட்ட நலுங்கு மாவு குளியல் பொடியை கொண்டு செய்யப்படும் சோப்பு தான் நலுங்கு மாவு குளியல் சோப்பு. இன்றளவும் கிராமங்களில் திருமணம், பெண்களின் பூப்பு அடைதல், போன்ற இல்லற விழாக்களில் நலுங்கு மாவு பயன்படுத்தப்படுகிறது. அதை சோப்பாக தயாரித்து தருவதால் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சோப் அனைத்து வகையான ஸ்கின்களுக்கும் ஏற்றது. அதேபோன்று சார்க்கோல் சோப் மற்றும் துளசி வேம்பு சோப்களும் நமது பட்டுப் போன்ற சருமத்திற்கு நல்ல பலனை தரும்.

தொழிலில் உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

தற்போது 12 வகையான சோப்புகளை தயாரித்துவருகிறேன். இன்னும் பல புதிய வகை சோப்புகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். மேலும் ரசாயனக் கலப்பில்லாத ஷாம்பு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும். அனைத்துத் தரப்பினரும் வாங்கி மகிழும் வகையில் குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் திட்டங்களும் இருக்கிறது. கடைகளில் ஆர்டரின் பேரில் விற்பனைக்கு தரும் ஐடியாவும் உள்ளது. என்னுடைய யூனிட்டை பெரிதாக்கி முதலீட்டை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் உள்ளது. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் எளிய தொழில் இது. பெண்களுக்கு ஏற்ற தொழிலும் கூட . பெண்கள் துணிந்து இத்தொழிலில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்கிறார் சுகன்யா.
– தனுஜா ஜெயராமன்

 

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு