செஃப் ஏரியா!

ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் உணவுகளை அதே சுவையில் வீட்டில் செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான். தினசரி வீட்டில் சமைக்கும் உணவுகள்தான். ஆனால், அதையே பெரிய ஸ்டார் ஹோட்டலில் வேறு பெயரில் புதுமையான சுவையில் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கேட்கும்போதே ருசிக்க வேண்டும் எனத் தோன்றும் உணவின் பெயர்களும், பார்த்தவுடனையே வாங்கத் தோன்றும் உணவின் தோற்றமும் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்? பலருக்கு ஸ்டார் ஹோட்டலில் சென்று சாப்பிட சூழல் கிடைக்காது. ஆனால், அனைவராலும் அந்த உணவுகளை வீட்டில் சமைக்க முடியும். அப்படி விதவிதமான உணவுகளை வீட்டில் சமைக்க நினைப்பவர்களுக்காகவே ரெசிபிகளோடு உணவு செய்முறையைப் பற்றி விவரிக்கிறார் செஃப் கார்த்திக். சென்னையைச் சேர்ந்த செஃப் கார்த்திக் உணவுத்துறையில் இருபது வருடம் அனுபவம் மிக்கவர். படித்து முடித்தவுடனேயே தி பார்க் ஹோட்டலில் செஃப்பாக பணியாற்றிய இவர், அதனைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் பெரிய பெரிய ஸ்டார் உணவகங்களில் செஃப்பாக பணியாற்றி இருக்கிறார். ஐரோப்பிய உணவுகள் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் கார்த்திக் தற்போது சென்னை நந்தனத்தில் இருக்கிற பிக்புல் என்கிற ஹோட்டலில் செஃப்பாக இருக்கிறார்.

எளிதாக அதே சமயம் அனைவராலும் செய்யக்கூடிய உணவுகளை எப்படி வீட்டில் செய்வது. அதே சமயம் அனைவருக்கும் பிடிக்கக்கூடிய உணவுகளைச் செய்து காட்டுங்களேன் எனச் சொன்னதும், அதைச் செய்து காட்டியதோடு எப்படி செய்ய வேண்டும் என்றும் விளக்குகிறார் கார்த்திக்.“ அனைவருக்குமே பாப்கார்ன் என்றால் பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு கூடுதலாகவே பிடிக்கும். ரெகுலராக ஒரே ஸ்டைல் பாப்கார்ன்தானே சாப்பிடுகிறீர்கள். கொஞ்சம் மாறுதலுக்காக சிக்கனில் பாப்கார்ன் செய்து சாப்பிடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இந்த சிக்கன் பாப்கார்னை செய்வதற்கு முதலில் கால் கிலோ போன்லெஸ் சிக்கனை சிறிது சிறிதாக வெட்டி வாங்க வேண்டும். அதன்பிறகு, மைதா இரண்டு டேபிள் ஸ்பூன், கார்ன் பிளவர் மாவு இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஒயிட் பெப்பர் சிறிதளவு, பூண்டு ஒரு டேபிள் ஸ்பூன் தேவைப்படும். அதனோடு சிறிதாக நறுக்கிய வரமிளகாய், சில்லி பவுடர், பிளாக் பெப்பர் இவை அனைத்தையும் சிக்கனில் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து மிக்ஸ் செய்ய வேண்டும். அதன் பிறகு மைதா, கான்பிளவர் மாவு, உப்பு, சிறிதளவு சீனி என அனைத்தையும் தனியாக ஒன்றாக்கி ஏற்கனவே மிக்ஸ் செய்து வைத்திருக்கிற சிக்கனை இந்த மைதா மிக்ஸிங்கில் சேர்த்து வாணலியில் சூடாக இருக்கிற எண்ணெயில் ஃப்ரை செய்து எடுத்தால் அனைவருக்கும் பிடித்த சிக்கன் பாப்கார்ன் தயார்.

அதைப்போலவே, ஸ்டார் ஹோட்டலில் மங்கி நட்ஸ் என்று ஒரு டிஷ் உள்ளது. அதாவது உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையை வைத்து தயாரிக்கப்படும் ஒரு ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ஸ்டார் ஹோட்டல் டிஷ்சை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தயாரிக்கலாம் என்றால், முதலில் நிலக்கடலையை மைதா மற்றும் கான்பிளவர் மாவில் சேர்த்து, கடாயில் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு, அதனோடு வெங்காயம் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து நன்றாக வதங்கி வரும்போது தக்காளி மற்றும் சோயா சாஸ் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும்போது சால்ட் அன்ட் பெப்பர் சேர்த்து அதனோடு வறுத்து வைத்திருக்கிற நிலக்கடலையைப் போட்டு மொத்தமாக வதக்கி சிறிதுநேரத்தில் இறக்கினால் சுவையான மங்கி நட்ஸ் ரெடி. இப்படி வீட்டில் செய்ய முடிகிற உணவுகளை தொடர்ந்து அறிமுகப் படுத்துகிறேன்’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் செஃப் கார்த்திக்.

விவேக்

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!