செஃப் ஏரியா!

ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் உணவுகளை அதே சுவையில் வீட்டில் செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான். தினசரி வீட்டில் சமைக்கும் உணவுகள்தான். ஆனால், அதையே பெரிய ஸ்டார் ஹோட்டலில் வேறு பெயரில் புதுமையான சுவையில் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கேட்கும்போதே ருசிக்க வேண்டும் எனத் தோன்றும் உணவின் பெயர்களும், பார்த்தவுடனையே வாங்கத் தோன்றும் உணவின் தோற்றமும் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். பலருக்கு ஸ்டார் ஹோட்டலில் சென்று சாப்பிட சூழல் கிடையாது.ஆனால், அனைவராலும் அந்த உணவுகளை வீட்டில் சமைக்கமுடியும். அப்படி விதவிதமான உணவுகளை வீட்டில் சமைக்க நினைப்பவர்களுக்காகவே ரெசிபிகளோடு உணவு செய்முறையை பற்றி விவரிக்கிறார் செஃப் கார்த்திக். சென்னையை சேர்ந்த செஃப் கார்த்திக் உணவுத் துறையில் இருபது வருடம் அனுபவம் மிக்கவர். படித்து முடித்தவுடனையே தி பார்க் ஹோட்டலில் செஃப்பாக பணியாற்றிய இவர், அதனைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் பெரிய பெரிய ஸ்டார் உணவகங்களில் செஃப்பாக பணியாற்றி இருக்கிறார்.

ஐரோப்பிய உணவுகள் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் கார்த்திக் தற்போது சென்னை நந்தனத்தில் இருக்கிற பிக்புல் என்கிற ஹோட்டலில் செஃப்பாக இருக்கிறார்.எளிதாக அதேசமயம் அனைவராலும் செய்யக்கூடிய உணவுகளை எப்படி வீட்டில் செய்வது. அதே சமயம் அனைவருக்கும் பிடிக்கக்கூடிய உணவுகளை செய்து காட்டுங்களேன் எனச் சொன்னதும், அதை செய்துகாட்டியதோடு எப்படி செய்ய வேண்டும் என்றும் விளக்குகிறார் கார்த்திக்.அனைவருக்குமே சோளம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு கூடுதலாகவே பிடிக்கும். அந்த சோளத்தை நாம் நேரடியாக அவித்தோ அல்லது சுட்டோ சாப்பிடுவோம். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடாமல் வேறு மாதிரியாக அதாவது கொஞ்சம் காரம் சேர்த்து கிரிஸ்பியாக சமைப்பது எப்படி எனப் பார்ப்போம். இந்த கிரிஸ்பி கார்ன் செய்வதற்கு முதலில் சோளம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சோளத்தோடு மைதா, கான்ஃப்ளவர் மாவு, ஒயிட் பெப்பர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கான்ஃபிளவர் மாவு கூடுதலாக சேர்த்து மிக்ஸ் செய்தாலும் இந்த கிரிஸ்பி கார்ன் சுவை நன்றாகத்தான் இருக்கும். அப்படி மிக்ஸ் செய்து வைத்திருக்கிற கார்னை சூடான எண்ணெயில் சிறிது நேரம் பொரித்து எடுத்தால் சுவையான கிரிஸ்பி கார்ன் தயார். s

பார்ப்பதற்கு புதிதாகவும் சுவைப்பதற்கு ஆர்வமாகவும் இந்த டிஷ்ஷை குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம். அதைப்போலவே, பெரும்பாலான ஹோட்டலில் கிரிஸ்பி விங்ஸ் என்று ஒரு டிஷ் வைத்திருப்பார்கள். அதாவது சிக்கனின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கிரிஸ்பியாக சமைத்து கொடுப்பார்கள். அப்படி கிரிஸ்பியான சிக்கன் விங்ஸ் எப்படி செய்வது என்றால், முதலில் சிக்கன் விங்ஸில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு, ஊறி இருக்கிற விங்ஸில் மிளகாய்த்தூள், சோயா சாஸ், உப்பு, சிறிதளவு சீனி, ப்ளாக் பெப்பர், இஞ்சி விழுது சேர்த்து மீண்டும் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, தனியாக மைதா, காப்ஃபிளவர், உப்பு மூன்றையும் சேர்த்து கலக்கிவைத்து ஏற்கனவே ஊறவைத்திருக்கிற சிக்கன் விங்ஸை இதில் சேர்க்க வேண்டும். கலந்து வைத்திருக்கிற மாவு அனைத்தும் சிக்கனின் மீது நன்றாக சேர்ந்த பின்பு எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். கொஞ்சம் காரமாக வேண்டுமென்றால் கூடுதலாக மிளகாய்ப்பொடி சேர்த்தும் இதை சமைக்கலாம். இந்த சிக்கனை அனைவருமே சாப்பிடலாம். இப்படி வீட்டில் செய்யமுடிகிற உணவுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறேன் என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் செஃப் கார்த்திக்.

– விவேக்

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்