வஞ்சிப்பதா?

ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2013ம் ஆண்டு 14வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த சமயம், ஒன்றிய அரசின் வரியில் 50 சதவீதம், மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி வந்தார். ஆனால், மோடி பிரதமரான பிறகு அவரது சிந்தனை மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டை குறைக்க நிதி ஆணையத்திடம் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணியாற்றிய பி.வி.ஆர். சுப்பிரமணியம் மூலம், நிதி ஆணைய தலைவர் ஒய்.வி.ரெட்டியிடம், பிரதமர் நரேந்திர மோடி 2 மணி நேரம் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், நிதி ஆணையத்தின் பரிந்துரையில், அதன் தலைவர் ஒய்.வி.ரெட்டி உறுதியாக இருந்ததால், ஒன்றிய நிதிநிலை அறிக்கை மறுசீரமைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியுதவி குறைக்கப்பட்டது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்க, ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், பிரதமர் மோடியும், ஒன்றிய அரசின் நிதி அமைச்சகமும் 33 சதவீதமாக குறைத்தனர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் நலநிதி 36 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. பி.வி.ஆர். சுப்பிரமணியம் மூலம் வெளிவந்துள்ள இந்த விவகாரம், தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், 2024-25ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி நடைபெற இருக்கிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த ஆண்டு, இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வை குறைக்க முயன்றது தொடர்பாக, பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை, எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டுமொத்த வரி பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கு இடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்காதது, மாநிலங்களை தண்டிக்கும் நோக்கம் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மீது மிக கொடுமையான நிதி தாக்குதலை பிரதமர் தொடுத்துள்ளார். தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதாக கூறப்படும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் வரி வசூல் விகிதம் அதிகம்.

ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் இருந்து அள்ளிச்செல்லும் வரி வருமானத்தில், பாதியையாவது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். ஆனால், 42 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைத்திருப்பது, ஒன்றிய அரசின் தமிழின பகை போக்கில், இன்னொரு கொடிய நடவடிக்கை ஆகும். இவ்வளவு நிதி நெருக்கடியிலும், அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், மகளிர் சுயமரியாதையை வலுப்படுத்தும் வகையில், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என சமூக நீதிக்கான ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியின் சாதனைகள் தொடர்கிறது. ஒன்றிய அரசு, தனது நயவஞ்சக போக்கை தொடருமேயானால், அதற்கான பதிலடியை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுப்பார்கள். இது நிச்சயம்.

Related posts

மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 30 வீடுகள் சேதம்

திருச்சியில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்..!!