சதுரகிரி கோயில் நடைபாதையை அனுமதி பெற்று விரிவுபடுத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:‘சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லும் பகுதியில் சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும்விதமாக தாணிப்பாறை முதல் கோயில் வரையிலான நடைபாதை விரிவாக்க பணிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று விருதுநகர் மாவட்டம், இலந்தைகுளம் சுரேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2015ல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘ கடந்த 2021ல் இந்தப் பகுதி திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முறையான அனுமதி பெற்று நடைபாதை அமைக்கும் பணி நிலுவையில் தான் உள்ளது’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சதுரகிரி மலைப்பகுதியில் பணிகள் ேமற்கொள்ள வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் முறையான அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம்’, என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது