பெரியபாளையம் அருகே ஏரியில் இருந்து கருகிய பெண் எலும்புக்கூடு மீட்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே இன்று காலை பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிக்குள் இருந்து எரிந்து கருகிய நிலையில் பெண்ணின் எலும்புக்கூட்டை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். பெரியபாளையம் அருகே மதுரவாசல் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்குள் இன்று காலை எரிந்து கருகிய நிலையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அவ்வழியே நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியாகி மதுரவாசல் கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் விஏஓ வேலாயுதம் புகார் அளித்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஏரிக்குள் எரிந்து கருகி, எலும்புக்கூடான நிலையில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். பின்னர் அச்சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், எலும்புக்கூடான நிலையில் இருந்த பெண்ணின் காலில் மெட்டி இருந்ததால், அவர் திருமணமானவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இப்புகாரின்பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏரிக்குள் எரிந்து கருகிய நிலையில் கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து, ஏரிக்குள் பிணத்தை எரித்தார்களா, வரதட்சணை கொடுமை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்