ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 14 புதிய வாகனங்கள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (12.05.2023) ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்பட்ட 14 புதிய வாகனங்களை வழங்கிடும் விதமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூ.8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில், புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 04.04.2022 அன்று முதற்கட்டமாக ரூ.5.08 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 69 புதிய வாகனங்களையும், 17.12.2022 அன்று இரண்டாம் கட்டமாக ரூ.1.56 கோடி செலவிலான 19 புதிய வாகனங்களையும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று ரூ.1.13 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 14 புதிய வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை