அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வரும் 22ம்தேதி குற்றச்சாட்டு பதிவு: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வரும் 22ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததையடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை கைது செய்யும் நோக்கில் ஆவணங்களில் அமலாக்க துறை திருத்தம் செய்துள்ளது. ஆவணங்களை முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது என்று கூறப்பட்டிருந்தது.

செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, பறிமுதல் செய்த ஆவணங்களில் பெரும்பாலானவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது சட்ட விரேதமாகும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும். செந்தில்பாலாஜி மீது அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு