சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ

பெங்களூரு: சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நிலவின் தென்பகுதியில் நாளை மறுநாள் மாலையில் லேண்டர் விக்ரம் தரையிறக்கப்பட உள்ளது.

நிலவின் தென்துருவப்பகுதியில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 செயற்கைகோள் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டர் கலன் கடந்த 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இதனிடையே, சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ கூறியிருந்தது.

மேலும், சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் இறக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சந்திராயன் – 3 நிலவில் தரையிறங்கும் பகுதியின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

“சந்திரயானில் பொருத்தப்பட்டுள்ள Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC) நிலவின் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளது. பாறாங்கற்கள் அல்லது ஆழமான குழிகள் இல்லாமல் பார்த்து நிலவில் லேண்டரை இறக்குவதற்கு இந்த கேமரா உதவி செய்யும்” என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு