முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள நிலையில் ஆந்திராவில் மீண்டும் தலைநகர் அமராவதி பணிகள் தொடக்கம்: எக்ஸ் பக்கத்தில் லோகோ மாற்றம்

திருமலை: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள நிலையில் தலைநகர் அமராவதியில் மாற்றங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி, எக்ஸ் பக்கத்தில் இந்தியா சன்ரைஸ் ஸ்டேட் என முதல்வர் சந்திரபாபு படத்துடன் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு முதல்வராக இம்மாதம் 12ம் தேதி காலை 11.27 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம் கன்னாவரம் கேசரப்பள்ளி ஐடி பார்க் அருகில் பதவி ஏற்க உள்ளதாக முதல்வர் அலுவலக அதிகாரப்பூர்வ ‘சிஎம்ஓ’ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சி.எஸ்.நீரப் குமார் பிரசாத் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். இதற்கிடையில் ஆந்திர மாநில முதல்வர் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிஎம்ஓவின் எக்ஸ் முகப்பு பக்கத்தில் ஜெகனின் புகைப்படத்தை அதிகாரிகள் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சந்திரபாபுவின் புகைப்படத்தை வைத்துள்ளனர். மேலும் எக்ஸ் பக்கத்தில் இந்தியாவின் ‘சன்ரைஸ் ஸ்டேட்’ என்ற வாசகத்தை லோகோவாக வைத்துள்ளனர். சந்திரபாபு 2014-2019ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தை இந்தியாவின் சன்ரைஸ் ஸ்டேட் என புரோமோட் செய்தார். இதற்கிடையில் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமராவதி தலைநகர் பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் பணிகள் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதிகள் முட்புதர்களாக மாறி செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் சாலைகள் பெயர்ந்து மண் மற்றும் ஜல்லிகற்களுடன் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமராவதி தலைநகருக்கான பணிகள் தொடங்கியது. சந்திரபாபு முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன் தடையின்றி தலைநகர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தலைநகருக்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை சி.ஆர்.டி.ஏ அதிகாரிகள் சுத்தம் செய்து வருகின்றனர். இதற்காக சிஆர்டிஏ ஊழியர்கள் சாலைகளில் குப்பைகளை அகற்றி வருகின்றனர். சாலைகளின் நடுவில் உருவாகியுள்ள பள்ளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் குடியிருப்புகள், எம்எல்ஏ – எம்எல்சி குடியிருப்புகள், உயர்நீதிமன்றம், தலைமை செயலகம், நீதிபதிகள் பங்களாக்கள், கிரிக்கெட் ஸ்டேடியம், என்ஐடி கட்டுமானப் பகுதிகளில் சி.ஆர்.டி.ஏ ஜங்கிள் கிளியரன்ஸ் செய்து வருகிறது. வி.ஐ.டி. மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களுக்கு அருகிலும் சிஆர்டிஏ அதிகாரிகள் 76 ஜேசிபிகள், புரோகிளனர்கள் மற்றும் இயந்திரங்களுடன் வேகமாக சுத்தம் செய்து வருகின்றனர். அமராவதி கட்டுமானப் பணிகளை சிஆர்டிஏ ஆணையர் விவேக் யாதவ் தலைமையில் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது: அதிமுகவினருக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்