மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை வருகிற 3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு

ரவுடிகளுக்கும் பாஜவுக்கும் உள்ள தொடர்பை குறித்து விளக்குவாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி