விழாவை புறக்கணிக்க வழக்கறிஞர்கள் முடிவு கள்ளக்குறிச்சியில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

*விழுப்புரம் மாவட்ட நீதிபதியிடம் முறையீடு

விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் புதிய நீதிமன்றம் திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் பெயர் புறக்கணிப்பு செய்ததால் வழக்கறிஞர்கள், விழுப்புரம் மாவட்ட நீதிபதியிடம் முறையீடு செய்தனர். கள்ளக்குறிச்சியில் நாளை(25ம் தேதி) நடைபெறும் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில் தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் பெயரை அழைப்பிதழில் போடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த மாவட்ட வழக்கறிஞர்கள் வெங்கடாஜலம் தலைமையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கள்ளக்குறிச்சியில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தையும், முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தையும் நாளை திறந்து வைக்க உள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் பெயர் குறிப்பிடப்படாததைக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தோம். எங்களின் புதிய நீதிமன்றங்களின் தொடக்கத்துக்கு தமிழ்நாடு அரசு நீதித்துறை தரப்பில் நகர்த்துவதில் சட்ட அமைச்சர் பங்காற்றியுள்ளார்.

அவர் சட்டம் மற்றும் நீதிமன்றங்களுக்கான அமைச்சராகவும் இருப்பதால், தொடக்க விழா அழைப்பிதழில் சட்ட அமைச்சரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். மேலும் அவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அழைத்து கவுரவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் இதற்கு முந்தைய நீதிமன்றத்தின் தொடக்க விழாக்களில் அதாவது 25.2.1996ம் தேதி நடைபெற்ற கள்ளக்குறிச்சி துணை நீதிபதி பதவியேற்பு விழா அழைப்பிதழில் அப்போதைய சட்ட அமைச்சர் கிருஷ்ணசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர் அழைக்கப்பட்டார்.

27.2.2011ம் தேதி நடைபெற்ற கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றக் அடிக்கல் நாட்டு விழாவுக்கு, அப்போதைய சட்ட அமைச்சர் துரைமுருகனின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் அழைக்கப்பட்டார். 22.10.2016ம் தேதி நடைபெற்ற கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு, அப்போதைய சட்ட அமைச்சர் சிவி சண்முகம் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் அழைக்கப்பட்டார்.

ஆனால், தற்போதுள்ள அழைப்பிதழில் சட்ட அமைச்சர் ரகுபதியின் பெயரோ, பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படவோ இல்லை. இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. மேலும் ஏமாற்றமடைந்துள்ளோம். எனவே, தொடக்க அழைப்பிதழில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பெயரைச் சேர்த்து நடைபெற உள்ள நீதிமன்றத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்து, விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மனு அளித்த பிறகு வெளியே வந்த வழக்கறிஞர்கள் கூறுகையில், தலைமை நீதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சரும் பங்கேற்க வேண்டும். அழைப்பிதழிலும் பெயர் போட வேண்டும். அதற்கு அவர் குறுகியகாலம் இருப்பதால் அழைப்பிதழை திருத்தம் செய்ய முடியாது. உயர்நீதிமன்ற பதிவாளர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு உரிய பிரதிநிதித்தும் கொடுக்காவிட்டால் இந்நிகழ்ச்சியை நாங்கள் புறக்கணிக்கபோவதாக தெரிவித்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்