Sunday, June 30, 2024
Home » 12ம் நூற்றாண்டில் உடுமலை கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை-சித்திரமேழி நாட்டார் கல்வெட்டில் தகவல்

12ம் நூற்றாண்டில் உடுமலை கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை-சித்திரமேழி நாட்டார் கல்வெட்டில் தகவல்

by Lakshmipathi

உடுமலை : கரை வழிநாட்டுக் கடத்தூர் பகுதியில் முதன்மையானதும், இன்றியமையானதுமாக இருந்த கல்வெட்டுகளில் ஒன்று சித்திரமேழி நாட்டார் கல்வெட்டு. இந்த கல்வெட்டு வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய 12ம் நூற்றாண்டு கால கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடத்தூர் பகுதியில் தென்பகுதியில் தற்போதிருக்கும் சுடுகாட்டுப் பகுதிக்கும் அருகில் கடத்தூரிலிருந்து தெற்கில் திண்டுக்கல் செல்லும் சாலையின் மேற்புறத்தில் உள்ளது.

சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளை தாங்கி நிற்கின்றது. இந்த கல்வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு என அப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

சித்திரமேழி நாட்டாரும் சமயமும்: சித்திரமேழி நாட்டார் என்பவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொண்டவர்கள். இவர்களே பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகம், அறப்பணி, ஊர் நாட்டாமை, போர்த்தளபதி, தட்டான் என பல தொழில்களிலும் பங்கேற்றனர். அதுபோல சித்திரமேழி நாட்டார் சைவ, வைணவ, சமண சமயத்திலும் பல பகுதிகளில் தங்களை இணைத்துக்கொண்டனர். சோழர்கள் காலத்தில் சபை, நகரம், வணிகம் போன்ற குழுக்கள் இருந்தன. உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்திரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.

திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகத்தையும் தலையாகக் கொண்டு செயல்பட்டனர் என்பது ஏற்புடைத்தது. எனவே சித்திரமேழி என்ற அடைமொழி கொண்டு வேளாண் தொழிலில் ஈடுபட்ட மக்களன்றி பிற தொழில்களை மேற்கொண்டவர்களையும் சித்திரமேழி என்ற அடைமொழியிட்டே அழைத்துள்ளனர். குறிப்பாக சேலம், ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில் சித்திரமேழி தட்டா எண் 15 சித்திரமேழி தட்டான் குழுமி 16 என்றும் குறிப்பு காணப்படுவதை ஒப்பிடலாம். இவை காலப்போக்கில் சித்திரமேழி நாட்டார் பிற தொழிலிலும் ஈடுபட்டதையே குறிக்கின்றது.

அனைத்து சமயங்களிலும் சித்திரமேழி நாட்டார் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதையே சைவ, வைணவ, சமண கோயில்களில் காணப்படும் சித்திரமேழி குறித்த செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. சித்தரமேழி நாட்டார், சித்திரமேழி விண்ணகரத்து நாட்டார், சித்திரமேழி விண்ணகரத்து பெரிய நாட்டார், சித்திரமேழி பெரிய நாட்டார் போன்ற பெயர் அமைப்புகள் சமய வேறுபாட்டை குறிக்கின்றனவா அன்றி அனைத்து சமயத்திலும் சித்திரமேழி பெரிய நாட்டார் பிரிவு கலந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

முறையாக உழவுத் தொழிலில் ஈடுபட்டோரை நாடு என்று குறித்தனர். பின்னர் நாட்டை நிர்வகிக்கும் பொழுது நாட்டார் என பெயர் பெற்றனர். இவர்களே சித்திரமேழி நாட்டர் என்றும், சித்திரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர். உழவுத் தொழிலைத் தொடர்ந்து வணிகம் வந்தது இவ்வணிகக் குழுக்களைக் குறிப்பிடும்பொழுது நானாதேசிகர், திசையாயிரத்து ஐநூற்றுவர் என்றும், உழவுத்தொழில் பிரிவு வணிகர்களை குறிக்கும் பொழுது சித்திரமேழி பெரிய நாட்டார் எனவும் அழைத்தனர்.

ஊர், நாடு, பெரிய நாடு, பேரிளமை நாடு என்பதும் பெரிய பகுதிகளாகும் இப்பகுதிகளை நிர்வகிப்பவர்கள் தங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. தங்களது சமுதாயத்திற்கு முழுவதும் பொறுப்பானவர்களையே அமைத்து வந்துள்ளனர். அத்தகைய பெருமக்களை சித்திரமேழி பெரியநாட்டார் அல்லது பெரியநாடாள்வார் என்றும் அழைத்துள்ளனர். எனவே வேளாண் தொழில்புரிந்து நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை புரிந்த மக்களே சித்திரமேழி பெரிய நாட்டார் என்றழைக்கப்பட்டவர்கள் என்பது பொருந்தும். அவர்கள் தமிழகத்திலும் குறிப்பாக தகடூரிலும் 10ம் நூற்றாண்டில் செழிப்புடன் இருந்தமையையே இவை உணர்த்துகின்றன.

வழக்கமான கல்வெட்டில் நிலக்கொடை கொடுத்தது பற்றியும், மக்களிடமிருந்து பெற்ற ஆயங்கள் பற்றியும், கோயிலுக்காக கொடுத்த நிலக்கொடை பற்றியும் கொடுத்தவர்களின் பெயர்கள் மட்டுமே தாங்கி நிற்கும் கல்வெட்டுகளில் இந்தக் கல்வெட்டு முழுமையாக மாற்றம் பெற்றுள்ளது.இதே கடத்தூர் மருதீசர் கோயிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் கொழுமம் சிவத்தலங்களிலும் நிலக்கொடை சார்ந்த கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

ஆனால் இந்தக்கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக இவ்விடத்தில் மிகப்பெரிய ஒரு கால்நடை சந்தை இருந்ததாகவும், அதைச் சுற்றி பாதுகாப்பாகவும் அகழியாகவும் நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்ததால்தான் இந்தக் கடத்தூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியதாகவும் அறிய வருகிறது.

கால்நடைகளுக்காகவும், விவசாய விளை பொருள்களுக்காகவும் மிகப்பெரிய அளவில் கடத்தூர் பகுதி செயல்பட்டதும், இவ்விடத்தில் கோட்டை இருந்ததையும் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்தால் இன்னமும் செய்திகள் மீளப்பெற வாய்ப்புகள் உள்ளன.

You may also like

Leave a Comment

17 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi