சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் பெரும் பீதி; போலீசார் தீவிர சோதனை

தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர். போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, புரளி என தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஒடிசா, பீகார் உள்ளிட்ட வட மாநிலத்திற்கும், கேரளா, கோவை உள்ளிட்டவற்றுக்கும் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகிறது. இரவிலும் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். இரவு நேரம் கூட பகல்போன்று காணப்படும். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என கூறி இணைப்பை துண்டித்தார். உடனே சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாருக்கும், பூக்கடை போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்பட்டனர். சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் மோப்ப நாய்கள், தீயணைப்பு வண்டி உதவியுடன் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், ரயில்கள், தண்டவாள பகுதி என ஒவ்வொரு இடமாக தீவிரமாக சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை, புரளி என்று தெரியவந்தது.

இதற்கிடையில், மிரட்டல் விடுத்த தொலைபேசி எண் பற்றி போலீசார் விசாரித்தனர். வியாசர்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் மணிகண்டன் (21) என்பவர்தான் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் கடந்த 7 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் இன்று காலையில் ராமலிங்கம் குளிக்க சென்ற நேரத்தில் அவரது செல்போனை எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மணிகண்டன் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை‌ போலீசார் எச்சரிக்கை விடுத்ததோடு அவரது தந்தைக்கும் அறிவுரை கூறிவிட்டு சென்றனர். ஏற்கனவே இதுபோன்று 3 முறை வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ரயில் பணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

வலுக்கும் போராட்டம்

பதவியிலிருந்து சீக்கிரம் மோடியை தூக்கினால் இந்தியாவிற்கு நன்மை பயக்கும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு