மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்த வழக்கு; செந்தில் பாலாஜி மீதான வழக்கு தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பலர் புகார் அளித்தனர். இந்த புகாரில் 2015ம் ஆண்டு வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை செந்தில் பாலாஜி மற்றும் 46 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

பின்னர் அளித்த புகாரில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 2017ம் ஆண்டு இரண்டாவதாக வழக்கு பதிவு செய்தது. இதில் 4 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். பின்னர் 2018ம் ஆண்டு மூன்றாவது வழக்கை செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அதில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் வரை குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் என சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஜெயவேல் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி, கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றார். இதனையடுத்து, வழக்கின் விசாரணை செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட அதிமுக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் இறை நம்பிக்கை கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் போற்றுகிற ஆட்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு திட்டமிட்டு கலைப்பு: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்