சென்னை சமூகப்பணி கல்லூரியில் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் விரைவில் அமைப்பு: செயலாளர் லஷ்மி பிரியா தகவல்

சென்னை சமூகப்பணி கல்லூரியில் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் விரைவில் அமைக்கப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா கூறினார். தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை மூலம் சமூக பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தி பெரியாரின் பிறந்தாள் ஒவ்வொரு ஆண்டும் ‘சமூக நீதி’ நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல, சமூகம் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகளை தனது கல்வி, அரசியல், சட்டம் மூலமாக தகர்த்து எறிந்து அனைத்து தரப்பு மக்களிடையே சமத்துவத்தை ஏற்பட செய்த அம்பேத்கர் பிறந்தநாளை ‘சமத்துவ நாளாக’ கொண்டாட வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் 2023-24ம் ஆண்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை சமூகப்பணி கல்லூரியில் ரூ.2 கோடி மானியத்தில் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம் நிறுவப்படும் என கூறியிருந்தார். அந்தவகையில், இம்மையத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா அளித்த பேட்டி : தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களின் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வகையான சமூக விலக்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சென்னை எழும்பூரில் உள்ள சமூகப்பணி கல்லூரியில் ‘‘சமூக நீதி மற்றும் சமத்துவ மையத்தை விரைவில் அமைக்க உள்ளோம்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் என பலத்தரப்பட்ட மக்கள் சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து அறிந்துக்கொள்ளலாம். மேலும், இந்த மையம் மூலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்களை மதிப்பீடு செய்தல், சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்த சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ திட்டங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் படிப்பில் முதுகலை திட்டத்தையும் இங்கு வழங்குவோம். அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் தற்போதைய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிந்து கொள்ளும் திறனை வளர்ப்பதே இம்மையத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மையத்தின் குறிக்கோள்கள்
* நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்கள் அறிந்து கொள்ளும் திறனை மேம்படுத்துவது.

* முதன்மையான திட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி அதை அவர்களை கிடைப்பதை வழிவகை செய்வது.

* சமூகநீதி மற்றும் சமத்துவத்தை வளர்ப்பது, சமூகத்தில் ஒடுக்கப்படுபவர்கள் நிலை குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது.

* இம்மையத்தின் மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்து தரவுகள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

மையத்தின் செயல்பாடுகள்
* கையிருப்பில் உள்ள தகவல்களை வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

* அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களை வைத்து இம்மையத்தின் மூலம் சமூகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசுவதற்கான வகுப்புகள் நடத்தப்படும்.

* சமூகத்தில் ஒதுக்குவது, சமூக அநீதி, பாகுபாடு பார்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் சேமித்து பின்னர், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு தகவல் மையமாக செயல்படும்.

* இம்மையத்தின் மூலம் சமூகநீதி மற்றும் சமத்துவம் குறித்து புரிதலை அதிகரிக்க பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும்.

* ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் சான்றோர்களை வைத்து கூட்டங்களை நடத்துதல்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!