7 அணிகளுக்கு எதிராக சதம்; இங்கி. வீரர் ஒல்லிபோப் விசித்திர சாதனை

லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒல்லி போப் சதம் அடித்து விசித்திர சாதனைப் படைத்தார். இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டான் லாரன்ஸ் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பின் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பென் டக்கெட் அதிரடியாக ஆடி 79 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும்.

இதைத்தொடர்ந்து மறுமுனையில் ஒல்லி போப்பும் ஒரு நாள் போட்டியில் ஆடுவதுபோல் அதிரடியில் இறங்கினார். அவர் முதல் நாள் முடிவில் 103 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து 103 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் 7 அணிகளுக்கு எதிராக 7 சதங்களை அடித்து இருக்கிறார். ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஒரு சதம் என்ற அடிப்படையில் தனது முதல் 7 சதங்களையும் 7 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்து அவர் சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இப்படி ஒரு விசித்திரமான சாதனையை செய்தது இல்லை. 2020 ஆம் ஆண்டு ஒல்லி போப் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து இருந்தார். அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 2022ல் ஒரு சதம் அடித்தார். தொடர்ந்து பாகிஸ்தான், அயர்லாந்து, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சதங்களை அடித்திருந்தார்.

தற்போது இலங்கை அணிக்கு எதிராக தனது 7வது சதத்தை அடித்து இருக்கிறார். இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஒல்லி போப்பின் தனிப்பட்ட பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு ஒல்லி போப் தனது சதம் மூலம் பதிலடி அளித்து இருக்கிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது. கடந்த 3 போட்டிகளிலும் சதம் அடித்த மூத்த வீரர் ஜோ ரூட் 13 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். தற்போது ஒல்லி போப் 103 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related posts

பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது