செல்போன்களை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி கடைகளில் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது

வளசரவாக்கம்: செல்போன்களை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி, கடைகளில் ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (40). இவர், அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இவரது கடைக்கு வந்த, திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த அரவிந்த் (32), விலை உயர்ந்த செல்போன்களை அதிக விலைக்கு விற்று தருவதாக சந்திரபோஸிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர், அரவிந்திடம் சுமார் ரூ.30 லட்சத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த 30 செல்போன்களை கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும், செல்போன்களை விற்பனை செய்த பணத்தை அரவிந்த் கொடுக்கவில்லை. இதுபற்றி, அரவிந்தை தொடர்பு கொண்டு, சந்திரபோஸ் கேட்டபோது, சரிவர பதிலளிக்காமல் அலைக்கழித்துள்ளார். இதையடுத்து, அவரது வீட்டுக்கு சந்திரபோஸ் நேரில் சென்றபோது, வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அவரது செல்போனுக்கு போன் செய்தார். ஆனால், செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுபற்றி அமைந்தகரை போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், அரவிந்த் மும்பையில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து போலீசார், நேற்று முன்தினம் இரவு அரவிந்த் சுற்றிவளைத்து கைது செய்து, அமைந்தகரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அரவிந்த், அமைந்தகரையில் மட்டுமின்றி தி.நகர், பாண்டிபஜார், நுங்கம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் உள்ள கடைகளிலும் இதேபோல் விலை உயர்ந்த செல்போன்களை அதிக விலைக்கு விற்பனை செய்து தருவதாக ரூ.1 கோடிக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்