செல்போன் பறிப்பு சம்பவத்தால் பறிபோன உயிர்.. ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி… கொள்ளையர்கள் 2 பேர் கைது!!

சென்னை: சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரயிலில் பயணித்த மாணவி பீர்த்தியிடம் செல்போன் பறிக்க முயன்றதால் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ப்ரீத்தி கடந்த 2ம் தேதி சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, ப்ரீத்தியிடம் இருந்து செல்போனை இரண்டு நபர்கள் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் நிலை தடுமாறி ரயிலில் இருந்து ப்ரீத்தி தவறி கீழே விழுந்தார்.

உடனே மாணவியை மீட்ட ரயில்வே போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாகத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரை சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து மாணவியின் செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. காயம் ஏற்படுத்தி வழிப்பறி செய்தல் பிரிவில் பதிவு செய்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு