விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விசிக பிரமுகரை சரமாரி வெட்டிக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அடுத்த நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ் (26). விசிக பிரமுகர். விபத்தில் ஒரு காலை இழந்ததால் ராஜேசுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நடராஜபுரத்தில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த ராஜேஷ், அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக டூ வீலரில் தனியாக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது பெட்ரோல் பங்கிற்கு அருகில் மயிலாடுதுறை பிரதான சாலையில் 3 பேர் கும்பல், ராஜேஷை வழிமறித்தது. தொடர்ந்து மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை மற்றும் உடல் பகுதிகளில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்தார்.

தகவலறிந்த குடும்பத்தினர் மற்றும் விசிக பிரமுகர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யகோரி உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து எஸ்பி மீனா வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் மணல்மேடு போலீசார், ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (27). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த ஆண்டு ராஜேஷ் ஓட்டி வந்த டூ வீலர் மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்தே ராஜேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அனைவரையும் கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு மருத்துவமனை அருகே மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் திடீரென நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்ைத நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு