மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

மும்பை: மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் நடந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து புறப்பட்டு நேற்று டெல்லி திரும்பியது. இந்திய அணி வீரர்கள் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு முடிந்ததும் இந்திய வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டனர். வீரர்களின் வரவேற்பையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

தனி விமானத்தின் மூலம் மும்பை வந்தடைந்த இந்திய அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேருந்தில், இந்திய அணி வீரர்கள் மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதிக்கு வந்தடைந்தனர். அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். கூட்டத்தின் நடுவே இந்திய அணி ஒருவழியாக மும்பையின் வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. அங்கும் ஏராளமான ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி, இரண்டு ரசிகர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவர்களை அங்கிருந்து மீட்கக் கூட முடியவில்லை. வான்கடே சாலை முழுவதும் ஆங்காங்கே செருப்புகள் சிதறிக்கிடந்தன.

மரைன் டிரைவைச் சுற்றிலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அங்கு கூடியிருந்த ரசிகர்களில் பலர் கார்களின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். அதனால் கார்களுக்கு சேதம் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்த பெண் ஒருவர், அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் தூக்கிச் சென்றார். அவருக்கு முதலுதவி அளிக்க கூட முடியவில்லை. மாநகர போலீசார் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்று பெரும்பாலான ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து கூட்ட நெரிசலில் சிக்கிய ரிஷப் மகேஷ் யாதவ் கூறுகையில், ‘கூட்ட ெநரிசலில் சிக்கி கீழே விழுந்தேன். எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ெதாடர் சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது சீராக மூச்சு விடுகிறேன். அளவுக்கு அதிகமான கூட்டம் வரும் என்று தெரிந்திருந்தும், மாநில காவல் துறை போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ என்றார். அதேபோல் மற்றொரு ரசிகர் ரவி சோலங்கி கூறுகையில், ‘கூட்டம் அதிகமானதால் போலீசாரால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்குள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது, தெற்கு மும்பையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரைன் டிரைவில் போக்குவரத்து மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரும சிரமத்திற்கு ஆளாகினர்’ என்றார்.

 

Related posts

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்