தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு எப்படி சட்டவிரோதமாகும்?: பாஜ அமைப்பு செயலாளர் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ. கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பா.ஜ.வின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பதியப்பட்ட வழக்கை புலன் விசாரணை செய்ய முடியாது. சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதி, சட்டவிரோத வழக்கு என்று எப்படி கூறமுடியும். விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த கேசவ விநாயகம் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது