கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவராக சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் என்பவர் இருந்துள்ளார்.

இவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் விபத்தில் சிக்கி பலியானார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த ஊட்டி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சில ஆவணங்களை எடுக்கவே கொலை, கொள்ளை நடந்தது என சில நாட்களுக்கு முன்பு தனபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!