செப்.12க்கு பிறகு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா பதில் மனு

பெங்களூரு: செப்.12ம் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரிநீரை தமிழகத்துக்கு பங்கீடு செய்யும் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து அதில் தினமும் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரியிருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது, ‘கர்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. நடப்பாண்டில் 66 சதவீதம் மழை குறைந்துவிட்டது. பல மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. அணைகளிலும் போதுமான தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீர் கர்நாடக மாநில விவசாய தேவைக்கும், குடிநீருக்குமே பற்றாக்குறையாக உள்ளது. எனவே சாதாரண ஆண்டில் தமிழகத்துக்கு பங்கீடு செய்வது போன்று இந்த ஆண்டு முடியாது.

வறட்சி காலங்களில் எப்படி பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்று முறை இன்னும் வகுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டுவருகிறோம். அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் செப்.12க்கு பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்