காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் குரல் கொடுக்கிறது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க கோரி, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் எச். வசந்தகுமார் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, இல.பாஸ்கரன், எஸ்.ஏ.வாசு, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், எம்.ஏ.முத்தழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். 5 ஆண்டுகளில் 12,500 பாடசாலைகளை ஏற்படுத்தி வெற்றிகரமாக நடத்தினார். இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனை காங்கிரஸ் வரவேற்கின்றது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னை காவிரி பிரச்னை. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரசும், தமிழக அரசோடு இணைந்து குரல் கொடுத்து வருகிறது. பரனூர் சுங்கச்சாவடியிலும் நடைபெற்ற முறைகேடு தொடர்பாகவும் விளக்கம் அளிக்க வேண்டும்.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?